

ஆர்.எஸ்.மங்கலம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. கோடை வெயில் சீசன் முடிந்து 4 மாதங்கள் கடந்த பின்னரும் தற்போது வரை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. இந்நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் நேற்று திடீரென மழை பெய்தது. அரை மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. ஆர்.எஸ்.மங்கலம் நகர், ஊரணங்குடி, தெற்கு ஊரணங்குடி, சனவேலி உள்ளிட்ட கிராமங்களிலும் மழை பெய்தது. சிறிது நேரம் மட்டுமே இந்த மழை நீடித்ததால் மழையை நம்பி விவசாய நிலங்களை உழவு செய்துள்ள விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். அதே நேரத்தில் ராமநாதபுரம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பெரும்பாலான ஊர்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.