

சென்னை,
சென்னை பல்லாவரத்தை அடுத்த பாரதி நகரைச் சேர்ந்த ஷானா பாத்திமாவும், அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பவரும் 2020ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு நான்கு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
மது போதைக்கு அடிமையான முகமது, தினமும் குடித்துவிட்டு சித்ரவதை செய்துவந்ததால், கணவரை விட்டுப் பிரிந்த பாத்திமா விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்றதாக கூறப்படுகிறது. இதனால், முகமது அலி அவரது மனைவி மீது கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி பாத்திமா தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மனைவி தனியாக செல்வதை நோட்டமிட்ட கணவர் முகமது அலி, கழிவறை கழுவும் ஆசிட்டை கொண்டுவந்து பாத்திமாவை மடக்கி அவரது முகத்தில் ஊற்றியுள்ளார். வலியால் துடித்த பாத்திமா, அங்கிருந்து தப்பி ஓட, முகமது அவரை விடாமல் துரத்திக் கொண்டே சென்றார். அதை பார்த்த நபர் ஒருவர் முகமதுவை தடுத்து நிறுத்தி, பாத்திமாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். கழிவறை கழுவும் ஆசிட் இடது கண்ணில் பட்டதில் பாத்திமாவுக்கு இடது கண்ணில் பார்வை பறிபோனதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும்நிலையில், இதுகுறித்து ஷானா பாத்திமா பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு மேற்கொண்டனர்.
நடுநடுங்க வைக்கும் இச்சம்பவம் குறித்து பல்லாவரம் காவல் நிலைய போலீசார் 126(2), 296(b), 124 BNS ஆகிய பிரிவுகளில் பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்து வந்த முகமது அலியை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று ஜமீன் பல்லாவரம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க வந்தபோது அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பல்லாவரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தியபோது, கருத்து வேறுபாடு காரணமாக, தனது மனைவி நீண்ட நாள்களாக தன்னைவிட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார் என்று முகமது அலி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மீண்டும் ஒன்றாக வாழலாம் என பலமுறை அழைத்தும் அவர் வரவில்லை. மேலும் தனக்கு விவாகரத்து வேண்டும் என தொடர்ந்து கூறியதால் ஆத்திரமடைந்து அவர் மீது ஆசிட்டை ஊற்றிவிட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து முகமது அலியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கையை பல்லாவரம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.