

சோலார்,
ஈரோடு அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு கடப்பாரையால் மனைவியை அடித்துக்கொன்ற பழ வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு அருகே உள்ள லக்காபுரம் ஊராட்சிக்குட்பட்ட சோலார் செல்லகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சேட்டு தனபால். இவருடைய மனைவி புஷ்பா (வயது 48). இருவரும் தள்ளுவண்டியில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இவர்களுக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்தநிலையில் சேட்டு தனபால் தன்னுடைய தந்தை ஆறுமுகத்துக்கும், புஷ்பாவுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். கடந்த 14-ந் தேதி இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
அதன்பின்னர் அன்று நள்ளிரவு 1 மணி அளவில் புஷ்பா கழிப்பறைக்கு சென்று வந்துள்ளார். அப்போது தூக்கம் கலைந்து எழுந்த சேட்டு தனபால் சந்தேகப்பட்டு நீ உயிரோடு இருந்தால்தானே இப்படி செய்கிறாய் என்று கூறி வீட்டில் இருந்த கடப்பாரையை எடுத்து புஷ்பாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
கணவன் தாக்கியதில் படுகாயம் அடைந்த புஷ்பா ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மனைவியை தாக்கியதாக சேட்டு தனபாலை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோபி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த புஷ்பா சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை இறந்துவிட்டார். இதையடுத்து மொடக்குறிச்சி போலீசார் சேட்டு தனபால் மீது தாக்குதல் வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.