குடும்பத் தகராறில் பிரிந்து சென்ற மனைவி: வேதனையில் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு

குடும்பத் தகராறில் இந்துமதி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
குடும்பத் தகராறில் பிரிந்து சென்ற மனைவி: வேதனையில் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள தென்முகம் வெள்ளோடு நல்ல நாம்பாளையத்தை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (42 வயது). கூலித்தொழிலாளி. இவருக்கும், திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள உப்புப்பாளையத்தை சேர்ந்த இந்துமதி என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு பிரணவ் (4 வயது) என்ற மகனும், பிரணிஷ்கா (2 வயது) என்ற மகளும் உள்ளனர்.

கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மனவேதனை அடைந்த இந்துமதி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில், நேற்று முன்தினம் உப்புப் பாளையத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு தாமரைச்செல்வன் வந்தார்.

பின்னர் அவர், தனது மனைவியிடம் குடும்பம் நடத்த தன்னுடன் வருமாறு அழைத்தார். அனால் அவர் வர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த தாமரைச்செல்வன், மாமனார் வீட்டில் உள்ள அறையை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு வயரால் தூக்குப்போட்டு தொங்கினார். இதை பார்த்த மனைவி இந்துமதி, சத்தம் போட்டு அலறினார்.

சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து தாமரைச் செல்வனை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே தாமரைச்செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com