

பழனி,
கணவருடன் பழக்கத்தை கைவிட மறுத்ததால் கள்ளக்காதலி மீது மனைவி ஆசிட் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் சிவதாபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 48). வெள்ளி பட்டறை தொழிலாளி. அவருடைய மனைவி ஜூலி (39). ஜெயக்குமாருக்கும், சேலம் பெரியபுத்தூரை சேர்ந்த வெண்ணிலா (40) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த ஜூலி தனது கணவரையும், வெண்ணிலாவையும் கண்டித்தார்.
ஆனால் ஜெயக்குமார், வெண்ணிலாவுடனான பழக்கத்தை கைவிடவில்லை. இதனால் கணவரின் கள்ளக்காதலியான வெண்ணிலா மீது ஜூலிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எனவே அவரது முகத்தை சிதைக்க முடிவு செய்தார். இதற்காக கணவரின் வெள்ளி பட்டறையில் கொலுசுவை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் 'சல்பியூரிக்' ஆசிட்டை பாட்டிலில் எடுத்து வைத்தார். இந்த ஆசிட்டால், வெண்ணிலாவை காயப்படுத்த முடிவு செய்து காத்திருந்தார்.
இந்தநிலையில் ஜெயக்குமார், வெண்ணிலாவுடன் நேற்று பழனிக்கு சாமி தரிசனம் செய்ய பஸ்சில் புறப்பட்டு வந்தார். இதனை அறிந்த ஜூலியும், அதே பஸ்சில் ஏறி, 2 பேரையும் ரகசியமாக பின்தொடர்ந்து வந்தார். பழனிக்கு வந்ததும் பஸ்சில் இருந்து இறங்கிய ஜெயக்குமாரும், வெண்ணிலாவும் அடிவாரம் நோக்கி சாலையில் நடந்து சென்றனர். அவர்களை பின் தொடர்ந்து கையில் 'ஆசிட்' பாட்டிலுடன் ஜூலியும் சென்றார்.
பழனி பூங்கா ரோடு பகுதியில் அவர்கள் சென்றபோது. ஜூலி ஆசிட்டை எடுத்து வெண்ணிலாவின் பின்னந்தலை பகுதியில் ஊற்றினார். இதில் அவருக்கும் காயம் ஏற்பட்டு வலியால் அலறினார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்ததும் பழனி அடிவாரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காயமடைந்த வெண்ணிலாவை மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜூலியை கைது செய்தனர்.
கணவருடனான பழக்கத்தை கைவிட மறுத்ததால் கள்ளக்காதலி மீது மனைவி ஆசிட் வீசிய சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.