தோட்டத்தில் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்-500 வாழைகள், 20 தென்னை மரங்கள் நாசம்

தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்ததில் 500 வாழைகள், 20 தென்னை மரங்கள் நாசமாயின.
தோட்டத்தில் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்-500 வாழைகள், 20 தென்னை மரங்கள் நாசம்
Published on

தாளவாடி

தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்ததில் 500 வாழைகள், 20 தென்னை மரங்கள் நாசமாயின.

வாழைகள் நாசம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் ஏராளமான காட்டுயானைகள் உள்ளன. உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி யானைகள் காட்டை விட்டு வெளியேறி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு படையெடுக்கின்றன.

மேலும் அங்குள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. இந்தநிலையில் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்குட்பட்ட தாளவாடி ஜோரா ஓசூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 34). இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் தோட்டத்தில் வாழை சாகுபடி செய்திருந்தார். நேற்று முன்தினம் 10 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 யானைகள் ரவிக்குமாரின் தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை நாசம் செய்தன. மேலும் அங்கிருந்த தென்னை மரங்களையும் சேதப்படுத்தின.

அகழி அமைக்கவேண்டும்

யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு தோட்டத்துக்கு வந்து பார்த்த ரவிக்குமார், யானைகள் பயிர்களை நாசம் செய்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அக்கம் பக்கத்து விவசாயிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு வந்த விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீப்பந்தம் காட்டி நள்ளிரவு 1 மணி அளவில் யானைகளை விரட்டினர். யானைகள் புகுந்ததில் 500 வாழைகளும், 20 தென்னை மரங்களும் நாசமானதாக கூறப்படுகிறது. சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தரவேண்டும். யானைகள் வனப்பகுதியை விட்டு வளியே வரும் வழியில் ஆழமாக அகழி அமைக்கவேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com