

கோவை,
கோவை கோட்ட வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. மேலும் கேரளாவில் உள்ள அமைதி பள்ளத்தாக்கில் இருந்து இடம்பெயர்ந்து செல்லும் காட்டு யானைகளுக்கு கோவை கோட்ட வனப்பகுதி வலசைப்பாதையாகவும் (வழிப்பாதை) உள்ளது.
இதன் காரணமாக இங்குள்ள வனப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். அத்துடன் மலையோர கிராமங்களில் அடிக்கடி புகுந்து காட்டு யானைகள் அட்டகாசத்திலும் ஈடுபட்டு வருகின்றன.
மருதமலை பாதையில் முகாமிட்டன
கோவை மருதமலையில் முருகன் கோவில் உள்ளது. முருகப் பெருமானின் 7-வது படைவீடு என்று போற்றப்படும் இந்த கோவில் மலை மீது இருப்பதால், அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல படிக்கட்டு வசதி மற்றும் சாலை வசதி என 2 பாதைகள் உள்ளன.
இந்த வனப்பகுதியிலும் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் பாதையில் அடிக்கடி காட்டு யானைகள் முகாமிடுவது வழக்கம். தற்போது முழு ஊரடங்கு என்பதால் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் படிக்கட்டு மற்றும் வாகனங்கள் செல்லும் பாதை அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறது.
இளைஞர்கள் தொந்தரவு
இந்த நிலையில் நேற்று முன்தினம் மருதமலை அடிவாரத்தில் இருந்து 50 அடி தூரத்தில் படிக்கட்டுகளில் 4 காட்டு யானைகளும், ஒரு குட்டியும் முகாமிட்டது. சிறிது நேரம் அங்கேயே அந்த யானைகள் நின்றிருந்தன. அதைப்பார்த்ததும் உள்ளூர் இளைஞர்கள் அங்கு வந்து அந்த யானைகளை சீண்டினார்கள்.
அவர்களை யானைகள் துரத்தியதும், படிக்கட்டுகளில் உள்ள மண்டபங்கள் மீது ஏறி நின்று யானைகளை செல்போன்கள் மூலம் வீடியோ எடுத்ததுடன் தொடர்ந்து சீண்டிக் கொண்டே இருந்தனர். இதனால் கடுமையாக கோபம் அடைந்த யானைகள் கால்களால் கீழே உதைத்தவாறு இளைஞர்களை நோக்கி வந்தன. ஆனால் அவர்கள் உயரத்தில் இருந்ததால் அந்த யானைகள் மீண்டும் வேறு வழியாக வனப்பகுதிக்குள் சென்றன.
வைரலாக பரவுகிறது
இந்த காட்சிகள் கொண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் காட்டு யானைகளை தொந்தரவு செய்த இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
ஆனைக்கட்டி, அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோவில், தடாகம் வழியாக வரும் காட்டு யானைகள் தொண்டாமுத்தூர் பகுதிக்கு செல்ல பாரதியார் பல்கலைக்கழக பின்பகுதி, மருதமலை வனப்பகுதி வழியாக வந்து ஆனைமடுவு என்ற இடத்துக்கு சென்று பின்னர் தொண்டாமுத்தூர் வனப்பகுதிக்கு செல்லும்.
உடனடி நடவடிக்கை
இதுதான் காட்டு யானைகளின் வலசைபாதை ஆகும். இப்படிதான் யானைகள் சென்று வருகின்றன. தற்போது இந்த பகுதியில் 5 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. அவற்றை இளைஞர்கள் தொந்தரவு செய்து வருகிறார்கள். ஆனால் வனத்துறையினா இந்தப்பகுதியில் எவ்வித கண்காணிப்பு பணியிலும் ஈடுபடவில்லை.
இதன் காரணமாக காட்டு யானைகள் ஊருக்குள் வர வாய்ப்பு உள்ளது. எனவே வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.