

தாளவாடி,
தாளவாடி வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. அவைகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் தாளவாடி வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 2 காட்டுயானைகள் வெளியேறி அருகே உள்ள சேஷன்நகருக்கு சென்றன.
பின்னர் அங்குள்ள விவசாயி குணசேகரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் புகுந்து அங்கிருந்த வாழைகளை மிதித்து நாசம் செய்தன. தோட்டத்தில் யானைகள் புகுந்ததை கண்ட குணசேகரன் அக்கம் பக்கத்து விவசாயிகளுடன் சேர்ந்து ஒலி எழுப்பி யானைகளை விரட்டினர். அதன்பின்னர் அங்கிருந்து யானைகள் வெளியேறி அருகே உள்ள நடராஜ் என்பவருடைய தோட்டத்துக்குள் புகுந்தன. அங்கு தென்னை மரங்களையும், பாக்கு மரங்களையும் வேரோடு பிடுங்கி எறிந்தன. விவசாயிகள் சுமார் 3 மணி நேரம் போராடி யானைகளை காட்டுக்குள் விரட்டினர்.
எனினும் யானைகள் புகுந்ததில் 200 வாழைகள், பாக்கு மரங்கள். தென்னை மரங்கள், தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள் சேதமடைந்தன. இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறும்போது, 'சேதமடைந்த பயிர்களுக்கும், குழாய்களுக்கும் வனத்துறையினர் உரிய இழப்பீடு பெற்றுத்தரவேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.