தோட்ட அலுவலகத்தை சூறையாடிய காட்டு யானைகள்

வால்பாறையில் தோட்ட அலுவலகத்தை காட்டு யானைகள் சூறையாடின.
தோட்ட அலுவலகத்தை சூறையாடிய காட்டு யானைகள்
Published on

வால்பாறையில் தோட்ட அலுவலகத்தை காட்டு யானைகள் சூறையாடின.

காட்டு யானைகள்

வால்பாறையில் உள்ள எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டு சுற்றித்திரிந்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் 8 யானைகள் முகாமிட்டு இருந்தன. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பன்னிமேடு எஸ்டேட் 2-வது பிரிவு தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் புகுந்தன.

அங்கு தோட்ட அலுவலகத்தின் சுவரை உடைத்தன. தொடர்ந்து உள்ளே இருந்த தொழிலாளர்களின் கோப்புகள், கணினி, பிரின்டர் உள்ளிட்டவற்றை வெளியே எடுத்து வீசி சூறையாடின. பின்னர் அருகில் இருந்த தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தேநீர் தயாரிக்கும் அறையை உடைத்து நாசம் செய்தன. இதையடுத்து அங்குள்ள குழந்தைகள் காப்பகத்தின் கதவை உடைத்த காட்டு யானைகள், துதிக்கையை உள்ளே விட்டு பாடப்புத்தகங்கள், உணவு பொருட்களை வெளியே எடுத்து வீசி சேதப்படுத்தியது.

பூஜை பொருட்கள் சேதம்

தொடர்ந்து அலுவலகம் முன்பு உள்ள சந்தன மாரியம்மன் கோவிலின் சுவரை யானைகள் உடைத்தன. பின்னர் கர்ப்பகிரகத்தின் கதவை உடைத்து உள்ளிருந்த பூஜை பொருட்களை சேதப்படுத்தின. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர், தொழிலாளர்கள் உதவியுடன் காட்டு யானைகளை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டினர். காட்டு யானைகள் நடமாட்டத்தை மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறும்போது, பன்னிமேடு எஸ்டேட் 2-வது பிரிவு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பை சுற்றி மின் வேலி அமைக்க வேண்டும். காட்டு யானைகளால் ஏற்பட்ட சேதங்களுக்கு வனத்துறையினர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றனர்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com