வேலூர் அருகே பட்டப்பகலில் காட்டு யானைகள் நடமாட்டம் - பொதுமக்கள் அச்சம்!

காட்டு யானைகள் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அருகிலுள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வேலூர்,

காட்பாடி அருகே ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் காட்டு யானைகள் பகலிலேயே நடமாடத் தொடங்கியதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி கிறிஸ்டியன்பேட்டை, கன்சாலூர், சுரக்கால்பேட்டை, வண்டறந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக காட்டு யானைகள் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அருகிலுள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், வழக்கமாக இரவு நேரங்களில் மட்டுமே வெளிவரும் யானைகள் தற்போது பகல் நேரத்திலேயே மலைப்பகுதிகளில் உலா வருவது பொதுமக்களிடையே கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களை வைத்துள்ள மக்கள் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், யானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையாமல் தடுக்க மேளம் அடித்து அவற்றை மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பகுதி ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ளதால், அண்டை மாநில வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. யானைகள் ஆக்ரோஷமாக இருக்கக்கூடியதால், பொதுமக்கள் யாரும் வனப்பகுதிக்கு அருகில் செல்லவோ அல்லது யானைகளை பார்க்கச் செல்லவோ கூடாது என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com