

சென்னை,
சென்னை கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவில் வன உயிரின வார நிறைவு விழாவில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வன உயிரினங்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதற்காக, வன உயிரின அவசர ஊர்தி வாகனத்தினை வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.ரஞ்சித்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“2026-ம் ஆண்டுக்கான வன உயிரின வார விழா அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வன உயிரின வார விழா விழிப்புணர்விற்காக வினாடி-வினா போட்டி, ஓவியப்போட்டி, மாரத்தான் போட்டி, முன்களப்பணியாளர்களுக்கு கருத்தரங்கு ஆகியவை வனத்துறையால் நடத்தப்பட்டது. மேலும், தன்னார்வலர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் இணைந்து வனபகுதிகளில் தூய்மைப்பணி மேற்கொண்டனர்.
அதனை தொடர்ந்து, கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவில் நடைபெற்ற வன உயிரின வார நிறைவு விழாவில், மாநில அளவில் மாணவ மாணவிகளுக்கு வினாடி-வினா இறுதிப் போட்டி நடத்தப்பபட்டது. இவ்விழாவினை சிறப்பிக்கும் பொருட்டு, வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.ரஞ்சித்குமார், விழாவில் கலந்து கொண்டு சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வன உயிரினங்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதற்காக, வன உயிரின அவசர ஊர்தி வாகனத்தினை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர், தமிழ்நாடு வன அனுபவங்கள் கழகம் (TNWEC) மூலம் தன்னார்வலர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட வன உயிரின புகைப்படக் கண்காட்சியினை வனத்துறை அமைச்சர் பார்வையிட்டு வன உயிரின வார விழாவினை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அதன் பிறகு கடல் ஆமைகளை முறையாக கண்காணித்து, உரிய கடல் பகுதிகளில் விடுவிப்பதற்கும் அதனை பாதுகாப்பதற்காகவும் நிலையான செயல்பாட்டு நடைமுறை குறித்த புத்தகத்தினை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியினைத் தொடர்ந்து, மாநில அளவில் நடைபெற்ற மாணவர்களுக்கான வன உயிரின விழிப்புணர்வு தொடர்பான ஓவியம், வினாடி வினா ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் நடத்தப்பட்ட புகைப்பட போட்டியில் வெற்றி பெற்ற புகைப்பட கலைஞர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். "நாகம்" செயலி மூலம் பதிவு செய்யப்பட்ட பாம்பு பிடிக்கும் தன்னார்வலர்களுக்கு பாம்புகளை பாதுகாப்பாக மீட்பதற்கு உபகரண தொகுப்பினை வழங்கினார்.
பின்னர், வனத்துறை அமைச்சர் தனது உரையில் வன உயிரின அவசர ஊர்தி வாகனத்தினை துவக்கி வைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார். மேலும், வனத்துறையில் வனத்துறை அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றுவதை வெகுவாக பாராட்டினார். கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா 1959 ஆம் ஆண்டு முன்னாள் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட இப்பூங்காவில் வன உயிரின வார நிறைவு விழாவில் பங்கேற்றதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.