மண்சரிவு ஏற்பட்ட சாலையில் தடுப்புச்சுவர் கட்டப்படுமா?

ஓவேலி அருகே மண்சரிவு ஏற்பட்ட சாலையில் தடுப்புச்சுவர் கட்டப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
மண்சரிவு ஏற்பட்ட சாலையில் தடுப்புச்சுவர் கட்டப்படுமா?
Published on

ஓவேலி அருகே மண்சரிவு ஏற்பட்ட சாலையில் தடுப்புச்சுவர் கட்டப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

சாலை உடைந்தது

கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு பெய்த கன மழையில் கூடலூரில் இருந்து ஓவேலி பேரூராட்சி பெரிய சோலைக்கு செல்லும் சாலையில் உள்ள கிளன்வன்ஸ் பகுதியில் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது. அதோடு சாலையும் பாதியாக உடைந்தது. இதனால் கனரக போக்குவரத்து துண்டித்தது. அங்கு சிறிய ரக வாகனங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. எனினும் பாதுகாப்பு கருதி நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோரம் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டது. ஆனால் தடுப்புச்சுவர் கட்டப்படவில்லை.

பொதுமக்கள் அச்சம்

இதற்கிடையில் தொடர் மழையால் அந்த சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அங்கு தடுப்புச்சுவரும் இல்லாததால், பெரிய சோலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கூடலூருக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் பயணம் செய்து வருகின்றனர். இதனால் சாலையை சீரமைத்து, தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நடவடிக்கை

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

சாலை பாதியாக உடைந்து 3 ஆண்டுகளை கடந்தும் தடுப்புச்சுவர் கட்டவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. இந்த வழியாக காலை, மாலை நேரத்தில் அரசு பஸ்களில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்பட பயணிகள் சென்று வருகின்றனர். ஆனால் சாலையும் மோசமாக உள்ளதால், அவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com