மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறாரா அண்ணாமலை..? வெளியான தகவல்

கடந்த 2020-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் அண்ணாமலை இணைந்தார்.
மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறாரா அண்ணாமலை..? வெளியான தகவல்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் பா.ஜ.க. தலைவராக இருந்தவர் அண்ணாமலை. கடந்த 2020-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் கட்சியில் இணைந்த அண்ணாமலைக்கு, மிக விரைவிலேயே 2021 ஜூலை மாதம் மாநில தலைமை பொறுப்பு வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் பா.ஜ.க. நன்றாக காலூன்ற அவர் மிகவும் பாடுபட்டார். இதனிடையே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். கூட்டணி கட்சி தலைவர்களோடு கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணி உடைந்தது. நாடாளுமன்ற தேர்தலில் பல முனைப்போட்டி நிலவியது. இதனால் பல்வேறு அரசியல் கட்சிகள் தோல்வியை தழுவின.

இதனிடையே பா.ஜ.க.வில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதியின்படி, மீண்டும் அண்ணாமலை தலைவராக்கப்படலாம் என்ற எதிர்பார்க்கப்பட்டநிலையில், கடந்த ஏப். 11-ஆம் தேதி புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.

பாத யாத்திரை, சாட்டையடிப் போராட்டம், செருப்பு அணியாமல் இருப்பது என்பன போன்ற நூதனமான செயல்பாடுகளால் தமிழக பாஜக தினசரி அரசியல் தளத்தில் பேசப்படுவதற்கான ஆதாரமாக விளங்கிய அண்ணாமலையின் அரசியல் எதிர்காலம் குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை, ஆந்திர மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினருக்கு தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சியுடன் பா.ஜ.க. மத்திய தலைமை பேசி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அண்ணாமலையின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு பா.ஜ.க.வின் வரலாற்றை எடுத்துக்கொண்டால், மாநில தலைவர் பதவியிலிருந்து வெளியேறிய தலைவர்களுக்கு தேசிய அளவிலான பொறுப்புகள், குறிப்பாக மத்திய இணைமந்திரி அல்லது மாநில கவர்னர் பதவிகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com