

சென்னை,
திருச்சி கிழக்கு, விராலிமலை, கருர், அம்பை, பெருந்துறை ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் நாளை சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளிக்கிறது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. ஆட்சி அமைத்தது. ஆனால் ஆட்சிக்கு போதிய எம்.எல்.ஏ.க்கள் இல்லாத நிலையில், அ.தி.மு.க. கட்சியில் இருந்து வெற்றிபெற்ற 25 எம்.எல்.ஏ.க்கள், அக்கட்சி தலைமையின் உத்தரவையும் மீறி, த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவு அளித்தனர்.
இதனால் அ.தி.மு.க. கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டது. அக்கட்சி யின் எம்.எல்.ஏ.க்கள் சிலர் ராஜினாமா செய்து த.வெ.க. கட்சியில் இணைந்தனர். இதனால் 7 தொகுதிகள் காலியாகின. அதில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அ.தி.மு.க.வின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த மரகதம் குமரவேலும், சத்தியபாமாவும் அதே தொகுதிகளில் முறையே, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
அடுத்ததாக காலியாக உள்ள புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, கரூர், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, முதல்-அமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு ஆகிய 5 தொகுதிகள் தொடர்பான வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது.
முன்னதாக 5 தொகுதிகளின் தேர்தல் முடிவுகளுக்கான தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அந்த வழக்குகள் முடிவடையும் வரை இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிட தடை விதிக்க கோரி வெங்கடாசலபதி என்பவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து ஜூலை 10-ந் தேதியன்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்கிடையில் ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு கால அவகாசம் உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
மேலும் ஆகஸ்ட் 24-ந் தேதியன்று பதில் மனுதாக்கல் செய்த தேர்தல் ஆணையம், இந்த 5 தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை இடைத்தேர்தல் நடத்தும் திட்டம் இல்லை என தெரிவித்தது.
இந்த நிலையில் அக்டோபர் 1-ந் தேதியன்று அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நாளை (27.11.2026) காலை 10.30 மணிக்கு, இவ்வழக்கின் இறுதி தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு வழங்க உள்ளது.