தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா...? இன்று முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஏப்ரல் மாதத்திற்கான தமிழக அரசின் அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா...? இன்று முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்
Published on

சென்னை

தமிழகத்தில் தினசரி கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவது குறித்த ஆலோசனை கூட்டம் தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது.

தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், தற்போதைய கொரோனா நோய் தொற்று நிலை குறித்த விவரங்களை சமர்ப்பித்தார்.

அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், சேலம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் நோய்த்தொற்று நாள் ஒன்றுக்கு வார சராசரியை விட கூடுதலாக பதிவாகிறது.

குறிப்பாக, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து பரவிய நோய்த்தொற்று, திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் ஆலயங்கள், கலாசார நிகழ்ச்சிகள் சார்ந்த கூட்டங்களில் கலந்துகொண்டவர்கள் மூலமாக மற்றவர்களுக்குப் பரவி உள்ளது.

சென்னை மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் பயிற்சி நிலையங்கள், குடும்ப, கலாசார மற்றும் இதர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்கள் மூலமும், கோவை, திருப்பூர் போன்ற இடங்களில் பணியிடங்கள் மூலமும் நோய்த்தொற்று பரவி வருவது தெரிய வந்துள்ளது.

முக கவசம் அணியாதது, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதது போன்றவையே இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும். முக கவசம் அணியாததற்காக மார்ச் 16-ந் தேதி முதல் தற்போது வரை ரூ. 2 கோடியே 9 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று கூடுதல் எண்ணிக்கையில் பதிவாகும் மாவட்டங்களில், மாவட்ட கலெக்டர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது.

கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வந்ததால், கொரோனா சிகிச்சை மையங்களில் இருந்த படுக்கைகள் பிப்ரவரி மாதத்தில் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தன. அவற்றை மீண்டும் பயன்படுத்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு கொரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆர்.டி. பி.சி.ஆர். எனப்படும் கொரோனா பரிசோதனைகளை 16 மாவட்டங்களில் மேலும் தீவிரப்படுத்த முடிவெடுக்கப்பட்டது.

கடந்த 7 நாட்களாக, சராசரியாக சென்னையில் ஏற்படும் இறப்பு விகிதம் 0.6 சதவீதமாகவும், செங்கல்பட்டு மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் முறையே 0.8 மற்றும் 0.5 சதவீதமாகவும், மற்ற மாவட்டங்களில் 0.6 முதல் 0.1 சதவீதத்துக்கு குறைவாகவும் உள்ளது.

இறப்பு எண்ணிக்கையை குறைப்பதற்கு அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்றும், அதை மருத்துவக் கல்வி இயக்குனர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் ஆகியோர் கண்காணிக்கவேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

தமிழகத்தில் ஏப்ரல் 1-ந் தேதி (நாளை) முதல் 45 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்ட இணைநோய் இல்லாதவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

மராட்டியம் போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று பலமடங்கு உயர்ந்துள்ள சூழலில், தமிழகத்திலும், அண்டை மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் நோய்த்தொற்று அதிகரித்துள்ள நிலையில், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முழுமையாக விவாதிக்கப்பட்டது. அனைத்து நிகழ்ச்சிகள், மதத் திருவிழாக்கள் மற்றும் தேர்தல் பிரசார கூட்டங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா நோய் பரவலை தடுக்க, 2020 மார்ச் 25ல், பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்பின், ஒவ்வொரு மாதமும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு இறுதியில், கொரோனா தாக்கம் குறைய துவங்கியதும், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. புத்தாண்டில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இம்மாதம் துவக்கத்தில் இருந்து, கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது என்ற விவரம் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com