ஆடிப்பெருக்குக்கு காவிரியில் புனித நீராட மேட்டூர் அணை திறக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு

தென்மேற்கு பருவமழை ஏமாற்றம் அளித்து வருவதால் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடும் சரிவை சந்தித்து உள்ளது.
ஆடிப்பெருக்குக்கு காவிரியில் புனித நீராட மேட்டூர் அணை திறக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு
Published on

மேட்டூர்,

அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந் தேதி ஆடிப்பெருக்கு அன்று காவிரி ஆற்றங்கரைகளில் புனித நீராட வசதியாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

ஆடிப்பெருக்கு

பொதுவாக ஆடி மாதத்தில் சுப காரியங்கள் செய்வதை தவிர்த்தாலும், சுப காரிய பேச்சுக்களை தொடங்கவும், புதிய முயற்சிகளை தொடங்கவும் ஏற்ற நாளாக ஆடிப்பெருக்கு கருதப்படுகிறது. ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ந் தேதி கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு என்றதும், காவிரிக்கரையில் செய்யப்படும் வழிபாடுகளே நம் அனைவரின் நினைவுக்கு வரும்.

புதிதாக திருமணமான பெண்கள் ஆடிப்பெருக்கு நாளில் தாலி பெருக்குதலைச் செய்யலாம். பிற சுமங்கலிகள் ஆற்றங்கரைக்குச் சென்று தாலிக்கயிறு மாற்றிக்கொள்வதும் உண்டு. சிலர் மஞ்சள் கயிற்றை மூத்த சுமங்கலிகள் அல்லது கணவன் கையில் கொடுத்துக் கட்டிக்கொள்வதும் உண்டு. இவ்வாறு செய்வதன் மூலம் நித்திய சுமங்கலி பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை ஆகும். பருவமழை தவறிய காலக்கட்டங்களில் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவாகவே இருக்கும். இதுபோன்ற சூழலில் ஆடிப்பெருக்கை காவிரி ஆற்றங்கரையில் பொதுமக்கள் கொண்டாட ஏதுவாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

தண்ணீர் திறக்கப்படுமா?

அதாவது ஆடி 18-ந் தேதிக்கு சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந் தேதி வருகிறது. அதே நேரத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஏமாற்றம் அளித்து வருவதால் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடும் சரிவை சந்தித்து உள்ளது. நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 74.26 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடி நீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்தானது வினாடிக்கு வெறும் 41 கனஅடி என்ற அளவில் தான் உள்ளது.

தற்போதைய சூழலில் பருவமழை தீவிரம் அடையாத பட்சத்தில் காவிரி ஆற்றில் விவசாயத்திற்கு தண்ணீர் திறப்பதே கேள்விக்குறியாகி வருகிறது. இந்த நிலையில், ஆடிப்பெருக்கு அன்று காவிரியில் பொதுமக்கள் வழிபட தண்ணீர் திறக்கப்படுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இருப்பினும் புனித நீராட வசதியாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

பொதுப்பணித்துறை விளக்கம்

இது குறித்து பொதுப்பணித்துறையினரிடம் கேட்ட போது. 'வழக்கமாக மேட்டூர் அணையில் இருந்து ஆடிப்பெருக்கை முன்னிட்டு சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழக அரசு இந்த மாத இறுதிக்குள் தண்ணீர் திறப்பது குறித்து முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்' என்றார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com