தென்மாவட்டங்களுக்கு பாசஞ்சர் ரெயில் சேவை மீண்டும் தொடங்குமா? - பயணிகள் எதிர்பார்ப்பு

தென்மாவட்டங்களுக்கு பாசஞ்சர் ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தென்மாவட்டங்களுக்கு பாசஞ்சர் ரெயில் சேவை மீண்டும் தொடங்குமா? - பயணிகள் எதிர்பார்ப்பு
Published on

மதுரை,

ரெயில்வே துறை தனது அடிப்படை கட்டமைப்பு வசதிகளின் மூலம் பல்வேறு துணை நிறுவனங்களை தொடங்கி அதன்மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் லாபம் சம்பாதித்து வருகிறது. இந்த நிலையில் புதிய ரெயில்கொள்கையின் படி, தண்டவாள பராமரிப்பு என்ற பெயரில் நாடு முழுவதும் பாசஞ்சர் ரெயில் சேவை முடக்கப்பட்டது.

அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த ரெயில்களில் முன்பதிவு பெட்டிகள் மட்டும் இணைக்கப்பட்டன. பொதுப்பெட்டிகள் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக 2-ம் வகுப்பு இருக்கை வசதி முன்பதிவு பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டன.

பிற மாநிலங்களில் பாசஞ்ர் ரெயில் சேவை தொடங்கினாலும், தென்னக ரெயில்வேக்கு உள்பட்ட தமிழகத்தில் பாசஞ்சர் ரெயில்சேவை தொடங்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த கொரோனா ஊரடங்கு காலத்திலும், 200 கி.மீ. தூரத்துக்கு மேல் இயக்கப்பட்ட மதுரை-புனலூர் பாசஞ்சர் ரெயில், மதுரை-விழுப்புரம் பாசஞ்சர் ரெயில், நாகர்கோவில்-கோவை பாசஞ்சர் ரெயில் ஆகியன எக்ஸ்பிரஸ் ரெயில்களாக மாற்றப்பட்டு சிறப்பு ரெயில்களாக இயக்கப்படுகின்றன.

அதேபோல, தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு இணைப்பு ரெயிலாக இயக்கப்பட்ட குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தூத்துக்குடி பெட்டிகள் இணைக்கப்படுவது நிறுத்தப்பட்டது.

நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தூத்துக்குடி பெட்டிகள் இணைக்கப்படுவது நிறுத்தப்பட்டது. நாகர்கோவில்-கோவை பாசஞ்சர் ரெயிலில் இரு மார்க்கங்களிலும் நெல்லையில் இருந்து திருச்செந்தூர், தென்காசிக்கு இணைப்பு ரெயில், மணியாச்சி ரெயில் நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு இணைப்பு ரெயில், கோவை ரெயில் நிலையத்தில் இருந்து மங்களூருக்கு இணைப்பு ரெயில் என இயக்கப்பட்டதால், பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களும் பயனடைந்து வந்தனர். ஆனால், இந்த இணைப்பு ரெயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு தினமும் 3 சேவைகள்,, ராமேசுவரத்துக்கு 2 சேவைகள் என இயக்கப்பட்டு வந்த பாசஞ்சர் ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நெல்லையில் இருந்து தென்காசிக்கும், தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கும், நெல்லை-திருச்செந்தூருக்கும் பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு திருச்செந்தூரில் இருந்து பழனி வரை அகல ரெயில்பாதையில் பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டது. பின்னர் இந்த ரெயில் பாலக்காடு வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. அதேபோல, காரைக்குடி-திருவாரூர் டெமு ரெயில் ஆகிய சேவையும் முடங்கின.

இதற்கிடையே, காரைக்குடி-திருவாரூர் இடையே முன்பதிவில்லாத டெமு ரெயில் சேவை தொடங்கியுள்ளது. அதேபோல, பிற பகுதிகளுக்கும் பாசஞ்சர் ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

குறிப்பாக தென்மாவட்டங்களில் இயக்கப்பட்ட பாசஞ்சர் ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் ரெயில்வேக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஏழைகளின் ரதம் என்ற பெயரும் ரெயிலுக்கு உண்டு. இது இனி ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆகிவிடக்கூடாது என்பதால், பாசஞ்சர் ரெயில்சேவையை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com