

ஈரோடு,
ஈரோடு அருகே உள்ள கனிராவுத்தர்குளம் நந்தவன தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பாட்ஷா. ஜவுளி வியாபாரியான இவருக்கு மனைவி அப்ருத் பேகம் மற்றும் முகமது முஜமில் (வயது 13), முகமது யாசின் (7) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இதில் முகமது முஜமில் 8-ம் வகுப்பும், முகமது யாசின் 2-ம் வகுப்பும் சின்னசேமூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை வழக்கம்போல் மாணவர்கள் 2 பேரும் பள்ளிக்கூடத்திற்கு சென்றுள்ளனர்.
பகல் 11 மணிக்கு பள்ளிக்கூடத்தில் இடைவெளி நேரம் விடப்பட்டது. இதனால் முகமது யாசின் சிறுநீர் கழிப்பதற்காக பள்ளிக்கூடத்திற்கு அருகில் சென்றுள்ளார். அப்போது ரோட்டில் கிடந்த பணக்கட்டை பார்த்த முகமது யாசின் அதை எடுத்துக்கொண்டு நேராக தனது வகுப்பறைக்கு சென்று, ஆசிரியை ஜெயந்தி பாயிடம் கொடுத்தார்.
உடனே அவர் அந்த மாணவனை அழைத்துக்கொண்டு பள்ளிக்கூட தலைமை ஆசிரியையான யாஸ்மினிடம் சென்று அந்த பணத்தை கொடுத்துள்ளார். அவர் எண்ணி பார்த்ததில் 500 ரூபாய் நோட்டுகள் கொண்ட அந்த கட்டில் மொத்தம் ரூ.50 ஆயிரம் இருந்துள்ளது.
அதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியை யாஸ்மின், மாணவன் முகமது யாசினை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றார். பின்னர் அவர், அந்த மாணவனுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனை சந்தித்து பணத்தை ஒப்படைத்தார்.
இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், மாணவரின் நேர்மையை பாராட்டி அவனுக்கும், அவனது அண்ணனுக்கும் சீருடை, பேக், ஷூ போன்றவற்றை வழங்கினார்.
இந்த நிலையில், சிறுவன் முகமது யாசினை நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்திற்கு வரவழைத்து தங்க செயின் பரிசு அளித்து பாராட்டினார்.
அவர் தொடர்ந்து சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பணத்திற்கு ஆசைப்படும் இந்த காலக்கட்டத்தில் நேர்மையாக பணத்தினை ஒப்படைத்த சிறுவனுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். நேர்மையுடன் வளர்த்த அவர்களது பெற்றோரை நான் பாராட்டுகிறேன் என கூறியுள்ளார்.
முகமது யாசினை என் பிள்ளையாக நினைத்து கல்வி செலவை ஏற்பேன். யாசின் என்ன படிக்க நினைத்தாலும் நான் படிக்க வைப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
வருகிற 19-ந் தேதி மாணவனுக்கு பாராட்டு விழா நடத்தி அவனுக்கு பாராட்டு சான்றிதழ் வழக்கப்பட உள்ளதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தெரிவித்துள்ளார்.