தவெகவுக்கு 5 ஆண்டுகள் ஆதரவு தொடருமா? - பெ.சண்முகம் பதில்

தவெக ஆதரவு கட்சிகள் கூட்டத்தில் சிபிஎம் பங்கேற்காது என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
தவெகவுக்கு 5 ஆண்டுகள் ஆதரவு தொடருமா? - பெ.சண்முகம் பதில்
Published on

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் பெ.சண்முகம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது.

சிபிஎம் பங்கேற்காது

”இடைத்தேர்தல், உள்ளாட்சித்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேச தவெகவினர் எங்களை அழைத்தனர். புதிய கூட்டணியை உருவாக்க வேண்டுமென தவெக தரப்பில் கூறப்பட்டது. தவெக ஆதரவு கட்சிகள் கூட்டத்தில் சிபிஎம் பங்கேற்காது. மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகள் வழங்குவோம்.

முதல்-அமைச்சர் பேச்சு

காவல்துறை மாணியக்கோரிக்கை பதிலுரையில் முதல்-அமைச்சர் சம்பந்தமில்லாமல் பேசியுள்ளார். எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விகளில் ஒரு கேள்விக்கு கூட முதல்-அமைச்சர் பதில் கூறவில்லை. பேசுவதற்கு நிறைய இடங்கள் உள்ளன. நினைத்ததை எல்லாம் சட்டசபையில் பேசுவோம் என்ற முறையில் பேசுவதை நாங்கள் ஏற்கவில்லை.

சட்டமன்றம் சண்டை மன்றமாக மாறியுள்ளது. சட்டமன்ற நேரலையை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். வீண் விவாதங்கள் கூடாது. மரபுகளுக்கு உட்பட்டு சட்டமன்றம் நடக்க வேண்டும். சட்டமன்ற நேரத்தை வீணடிக்காமல் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மிசா கைது

மிசா கைது பற்றி அமைச்சர் நிர்மல்குமார் பேசியது சிறுபிள்ளைத்தனமானது. கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆயிரக்கணக்கானோர் மிசா காலங்களில் சிறையில் இருந்தனர். மிசா கால கொடுமைகள் குறித்த ஆவணங்கள் நிறைய உள்ளன. மிசா சிறை கொடுமைகள் குறித்த வரலாற்றை தவெக அமைச்சர்கள் படிக்க வேண்டும்.

தவெக ஆதரவு

தவெகவுக்கு வெளியில் இருந்து தங்களது ஆதரவு தொடரும். தவெக அரசுக்கு 5 ஆண்டுகள் ஆதரவு கொடுப்போம் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. தவெகவின் நிலைப்பாட்டை பொறுத்து அவர்களுக்கு ஆதரவளிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.”

இவ்வாறு அவர் பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com