பெண்களிடம் வரம்பு மீறி நடந்து, ரவுடித்தனத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை; மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை

பெண்களிடம் வரம்பு மீறி நடந்து, ரவுடித்தனத்தில் ஈடுபடுவோர் மீது கட்சி கடும் நடவடிக்கை எடுக்கும் என மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெண்களிடம் வரம்பு மீறி நடந்து, ரவுடித்தனத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை; மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை
Published on

சென்னை,

பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் பிரபல தனியார் கல்லூரிக்கு செல்லும் வழியில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்தியா (வயது 35). இவருக்கும் பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் செல்வகுமார் (52) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

செல்வக்குமார் தற்போது சத்தியா பியூட்டி பார்லர் நடத்தி வரும் பாரதிதாசன் நகரில் குடியிருந்துகொண்டு பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் செல்வகுமார் சத்தியாவின் பியூட்டி பார்லருக்குள் புகுந்து அவரை சரமாரியாக காலால் உதைத்து தாக்கினார்.

கடந்த 4 மாதத்திற்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தற்போது வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது. தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. இந்த சம்பவத்தை வாட்ஸ்அப் மற்றும் தொலைக்காட்சிகளில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தி.மு.க.வினர் மத்தியிலும் இந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து பெரம்பலூர் திமுக நிர்வாகி செல்வகுமார் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள தகவலில், தனிப்பட்ட பிரச்சினைகள், விருப்பு-வெறுப்புகள் இவற்றின் காரணமாக அடாவடியாக செயல்படும் போக்கினை தி.மு.க. அனுமதிக்காது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரவுடித்தனமாக செயல்படுவது, பெண்களிடம் வரம்பு மீறி நடப்பது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுபவர் யாராக இருந்தாலும், கட்சி விதிகளின்படி தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com