

சென்னை,
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பல தலைமுறைகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சியில் பங்கு பெற்று அமைச்சர்களாக பதவியேற்று இருப்பதை காங்கிரஸ் கட்சியின் மாநில மற்றும் தேசிய தலைவர்கள் மிகப்பெரிய சாதனையாக தங்களை தாங்களே பாராட்டி கொள்கிறார்கள். வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் ஆனால் இதனால் தமிழ்நாட்டிற்கு என்ன நன்மை நடக்கும்?
காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமைந்திருப்பதால் காங்கிரஸ் அமைச்சர்கள் கர்நாடகாவிற்கு பயணித்து காவேரி தண்ணீரை பெற்று வந்துவிடுவார்களா? தொடர்ந்து காவிரியின் குறுக்கே மேகதாது என்னுமிடத்தில் அணைகட்டியே தீருவோம் என்று சூளுரைத்துக் கொண்டிருக்கின்ற கர்நாடக துணை முதல்-மந்திரி சிவகுமார் அவர்களை தடுத்து விடுவார்களா? கேரளாவிலும் காங்கிரஸ் ஆட்சி மலர்ந்திருக்கிற நேரத்தில் தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸ் அமைச்சர்கள் கேரளாவிற்கு பயணித்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் விரிவாக்கத்திற்காகவும், ஆனைமலையாறு - நல்லாறு பிரச்சனைகளையும் கேரள முதல்-மந்திரியிடம் பேசி தீர்த்து விடுவார்களா அல்லது நீலகிரி மலையிலே உருவாகிற தண்ணீரை தமிழ்நாட்டின் பக்கம் திருப்பி மேயாற்றிலே கலப்பதற்கு கேரள காங்கிரஸ் அரசோடு பேசி தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து விடுவார்களா. இப்படி ஏதாவது நடந்தால் தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். தமிழ்நாட்டு ஆட்சியிலே பங்கு பெற்றிருக்கின்ற காங்கிரஸ் அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கின்ற அதே வேளையில் தமிழக மக்களுக்கு என்ன பயன் என்பதையும் கேட்காமல் இருக்க முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது