அளவேரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா?

அளவேரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகள் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அளவேரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா?
Published on

மீன்சுருட்டி:

அளவேரி

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் முத்துசேர்வாமடம் ஊராட்சியில் ரெட்டிப்பாளையம் அருகே அளவேரி உள்ளது. இந்த ஏரியை கடந்த சில ஆண்டுகளாக ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளன. இந்த ஏரியின் தண்ணீர் மூலம் சுமார் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்கள் பாசனம் பெற்று வந்தன. தற்போது இந்த ஏரியில் இருந்து வரத்து வாய்க்கால் சரியாக இல்லாததால் ஏரி பாசனம் முற்றிலும் நின்று போனது.

இருப்பினும் ஏரிக்கு மறுபுறம் உள்ள பகுதியில் பொதுமக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர். ஆனால் ஆகாயத்தாமரை செடிகள் மண்டியுள்ளதால் தற்போது இந்த ஏரியில் குளிக்கும் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால் இந்த ஏரியில் குளிப்பதை பலர் தவிர்க்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே குளித்து வருகின்றனர்.

சீரமைக்க கோரிக்கை

தற்போது பெய்த மழையால் ஏரியில் தண்ணீர் நிரம்பி வருகிறது. எனவே ஏரியில் மண்டியுள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி, பொதுமக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தும் வகையில் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

ஆகாயத்தாமரை செடிகள்

குடும்பத்தலைவி ராஜகுமாரி:- இந்த பகுதியை சர்ந்த பொதுமக்கள் இந்த ஏரியில் துணிகளை துவைத்து, குளித்துவிட்டு செல்வது வழக்கம். ஆனால் தற்போது எந்த பகுதியில் இறங்கி குளிப்பது என்று தெரியாதவகையில், இந்த ஏரியில் ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் நோய்த்தொற்று ஏற்படுமோ? என்ற அச்சத்தில் தற்போது யாருமே ஏரியில் குளிப்பது இல்லை. எனவே ஆகாயத்தாமரை செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

தொழிலாளி ரவிச்சந்திரன்:- அளவேரியை இந்த பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வந்தோம். நாங்கள் வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்பும்போது, இந்த ஏரியில் குளித்து விட்டுதான் வீட்டிற்கு செல்வோம். ஆனால் தற்போது இந்த ஏரியில் குளிக்க முடியாத வகையில், ஏரி முழுவதும் ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்து உள்ளது. எனவே ஆகாயத்தாமரை செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com