தியாகதுருகத்தில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தியாகதுருகத்தில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தியாகதுருகத்தில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
Published on

தியாகதுருகம், 

தியாகதுருகம் பேரூராட்சிக்கு உட்பட்ட உதயமாம்பட்டு பகுதியில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு தியாகதுருகத்தில் இருந்து உதயமாம்பட்டு வரை செல்லும் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் தார்சாலை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்த சாலையின் வழியாக அந்தியூர், சிக்காடு, சீதேவி, கல்சிறுநாகலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்பெற்று வந்தனர். இந்த நிலையில் இந்த சாலையை அதிகாரிகள் சரிவர பராமரிக்காததால், தற்போது ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

இதனால் இந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதேபோல் உதயமாம்பட்டு சாலையில் உள்ள உதவி வேளாண்மை அலுவலகத்திற்கு வந்து செல்லும் அதிகாரிகளும், விவசாயிகளும் மிகவும் சிரமம் அடைகின்றனர். இரவு நேரங்களில் சாலையில் செல்லும்போது வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.

கோரிக்கை

தியாகதுருகம் அரசு பள்ளியில் படிக்கும் உதயமாம்பட்டு பகுதியைச் சேர்ந்த மாணவர்களும், பொதுமக்களும் கடந்த ஜனவரி மாதம் புதிதாக தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தி உதயமாம்பட்டு பிரிவு சாலையில் சாலை மறியல் செய்தனர். இருப்பினும் இதுநாள் வரை தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து உடனடியாக புதிய தார் சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஸ் கவிழும் நிலை

இதுகுறித்து உதயமாம்பட்டு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் கூறுகையில், உதயமாம்பட்டு சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் அவ்வப்போது தவறி விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. மழை பெய்தால் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்குவதால் மேடு, பள்ளம் தெரியாத நிலை உள்ளது. இதனால் வேலைக்கு செல்லும் பெண்களும், பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் குறித்த நேரத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் இந்த வழியாக செல்லும் அரசு பஸ், சாலையில் உள்ள பள்ளத்தில் ஏறி, இறங்கும் போது கவிழும் ஆபத்தான நிலை உள்ளது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com