

சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை வேகம் எடுத்துள்ள நிலையில், அதை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடந்த 10-ந்தேதி முதல் வரும் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், கொரோனா பரவல் குறையவில்லை. தொடர்ந்து, அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தினமும் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துவிட்டது. இந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்புக்கான காரணம் குறித்தும், அதை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச்செயலகத்தில் காலை 10 மணியளவில் நடைபெற்றது.
பிரதீப் கவுர், குகநாதன், ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட 19 மருத்துவ நிபுணர்கள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். தலைமைச்செயலாளர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைக்கு பின்னர் சட்டமன்ற கட்சி உறுப்பினர்களின் குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் மருத்துவ குழுவினர் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில், முழு ஊரடங்கை தீவிரப்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன. முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் எனவும் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.