மீதமிருக்கும் ஆட்சிக் காலத்திலாவது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமா தி.மு.க. அரசு? - டி.டி.வி. தினகரன்

கோப்புப்படம்
பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
எஞ்சியிருக்கும் ஆட்சிக் காலத்திலாவது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு துரிதப்படுத்திட வேண்டும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண் ஒருவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முற்பட்டபோது அப்பெண் கத்திக் கூச்சலிட்டதால் ஆற்றில் அழுத்திக் கொலை செய்யப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
கடந்த சில தினங்களில் மட்டும் வேலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண், காஞ்சிபுரம் அருகே 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி, கிருஷ்ணகிரியில் 10 வயது சிறுமி, கன்னியாகுமரியில் டியூசன் சென்ற மாணவி, திருச்செந்தூரில் 9-ம் வகுப்பு பயிலும் சிறுமி என பெண்கள் பலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் நாள்தோறும் வெளியாகும் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் தொடர்பான செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பது தமிழகத்தில் பெண்கள் வாழவே முடியாதா? என்ற கேள்வியை எழுப்பும் வகையில் அமைந்திருக்கிறது.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களின் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனைகள் கடுமையான பின்பும், அக்குற்றங்கள் தொடந்து அதிகரித்து வருவது அச்சட்டத்தின் மீது குற்றவாளிகளுக்கு துளியளவும் அச்சத்தை ஏற்படுத்தவில்லை என்பதை வெளிக்காட்டுகிறது. மேலும் செயல்பட முடியாத நிலையில் இருக்கும் காவல்துறையால் இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் தொடந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.
எனவே, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, எஞ்சியிருக்கும் ஆட்சிக் காலத்திலாவது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்திட வேண்டும் என தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






