

சென்னை,
தேர்தல் தோல்வியில் அ.தி.மு.க. இரண்டாக உடைந்துள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும் (22 எம்.எல்.ஏ.க்கள்), சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையில் மற்றொரு அணியும் (25 எம்.எல்.ஏ.க்கள்) செயல்படுகிறது. இதில் வேலுமணி தரப்பு சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்தது.
ஆனால், தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்த எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு நேற்றைய அமைச்சரவை விரிவாக்கத்தில் பதவி எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதற்கு முதன்மையான காரணம் என்னவென்றால், 3-ல் 2 பங்கு அதாவது 32 எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்காத நிலையில் கட்சித்தாவல் தடை சட்டத்தால் எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிபோகும் நிலை ஏற்படும் ஆபத்து. அதேநேரத்தில், த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ள வி.சி.க., கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை அமைச்சரவையில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனினும், அடுத்தகட்டமாக பொதுக்குழுவை கூட்டி அதில் பெரும்பான்மை பெற்று எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வெளியேற்ற எஸ்.பி.வேலுமணி தரப்பினர் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில், பதவியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், ஒரே கட்சிக்குள் எதற்கு 2 பிரிவுகள் என்று அ.தி.மு.க. நடுநிலையாளர்கள் சிலர் கருதுவதால் எடப்பாடி பழனிசாமி தரப்பு மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பை ஒருங்கிணைக்கும் தீவிர முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.