சுகாதார வளாகம் விரைந்து கட்டி முடிக்கப்படுமா?

நொய்யல் அருகே சுகாதார வளாகம் விரைந்து கட்டி முடிக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளன
சுகாதார வளாகம் விரைந்து கட்டி முடிக்கப்படுமா?
Published on

சுகாதார வளாகம்

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே சேமங்கி பெரியார் நகரில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசித்து வரும் பெண்களின் நலன் கருதி கடந்த சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் நகர் எதிர்புறம் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் அந்த சுகாதார வளாகத்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சுகாதார வளாகம் மிகவும் பழுதடைந்து சுற்றுச்சுவர் கீழே விழுந்து இருந்தது. இதனால் அந்த சுகாதார வளாகத்தை பெண்கள் பயன்படுத்தமுடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

கோரிக்கை

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும், மறியலில் ஈடுபட்டதாலும் புகழூர் காகித ஆலை நிர்வாகத்தின் சார்பில் பெரியார் நகர் எதிரில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் புதிதாக சுகாதார வளாகம் கட்டும் பணி தொடங்கியது. பின்னர் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே சுகாதார வளாக கட்டுமான பணிகள் நடைபெற்ற நிலையில் சில பிரச்சினைகள் காரணமாக சுகாதார வளாகம் கட்டும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் இரவு நேரங்களில் சாலை ஓரத்தில் உபாதைகளை கழித்து வருகின்றனர். இதனால் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து அவதி

பரியார் நகர் பகுதியை சேர்ந்த ரேணுகா:-

பெரியார் நகர் பகுதி மிகவும் குறுகிய இடமாக உள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் குடியிருப்பவர்கள் சிறிய, சிறிய வீடுகளாக கட்டி மிகவும் குறுகிய இடத்தில் வாழ்ந்து வருகிறோம். இங்குள்ள வீடுகளுக்குள் கழிவறை கட்ட முடியாத நிலைஉள்ளது. நாங்கள் பொது கழிப்பிடத்தை நம்பிய உள்ளோம். பொது கழிப்பிடம் இல்லாததால் எங்களைப் போன்ற பெண்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறோம். இது சம்பந்தமாக பலமுறை அதிகாரியிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே விரைந்து உள்ளாட்சித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாதியில் நிற்கும் பெண்களுக்கான சுகாதார வளாகத்தை கட்டி பெண்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும்.

10 ஆண்டுகளாக போராட்டம்

பரியார் நகர் பகுதியை சேர்ந்த ராமாயி:-

சுகாதார வளாகம் இடிந்து விட்டதால், புதிய சுகாதார வளாகம் கட்டித்தரக் கோரி பலமுறை புகார் அளித்தோம். அதன் விளைவாக சுகாதார வளாகம் கட்டும் பணி தொடங்கி பாதியில் நிற்கிறது. இதுகுறித்து மீண்டும் அதிகாரியிடம் முறையிட்டோம். அதிகாரிகள் கட்டித் தருவதாக உறுதி அளித்தனர். ஆனால் 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை அதைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. எங்களைப் போன்ற முதியவர்கள் இரவு நேரத்தில் ஏதோ ஒரு இடத்தில் உடல் உபாதைகளை கழித்து விட்டு சென்று விடுவோம்.

பல ஆண்டுகள் கோரிக்கை

சேமங்கி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த முத்துவேல்:-

சுகாதார வளாகம் கட்டும் பணி பாதியிலேயே நிற்கிறது. சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரியிடம் எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் சென்று பலமுறை புகார் செய்தோம். புகார் செய்யும் போதெல்லாம் விரைந்து கட்டி தருவதாக உறுதி அளித்தனர். ஆனால் யாரும் அதற்கான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் எங்கள் வீட்டில் உள்ள பெண்கள் கழிவறைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இடபற்றாக்குறை

பெரியார் நகர் பகுதியை சேர்ந்த சேதுசரண்:-

எங்கள் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் அதிக மானபெண்கள் வசித்து வருகின்றனர். எங்களது வீடுகளுக்குள் கழிவறை கட்டக் கூடிய அளவுக்கு இடம் பற்றாக்குறைஉள்ளது. இதனால் நாங்கள் வீட்டில் கழிவறைகளை கட்ட முடியவில்லை. எங்களது பெண்கள் இரவு நேரங்களில் சாலை ஓரங்களில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். அரசு அதிகாரிகள் யாரும் எங்களை கண்டு கொள்ளவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com