குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் தனியாரிடம் ஒப்படைப்பா? - விஞ்ஞானிகள் விளக்கம்

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் தனியாரிடம் ஒப்படைப்பா? என விஞ்ஞானிகள் தெரிவித்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
குலசேகரன்பட்டினம்
Published on

ராக்கெட் ஏவுதளம்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. தொடர்ந்து நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம், தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்படுகிறது. பூமத்திய ரேகைக்கு மிக அருகில் இப்பகுதி அமைந்துள்ளதால் குறைந்த எரிபொருளில் ராக்கெட்டுகளை செலுத்தி, செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்த முடியும். இதற்காக குலசேகரன்பட்டினத்தில் 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, ரூ.986 கோடியில் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு (2027) மார்ச் மாதத்துக்குள் கட்டுமான பணிகள் நிறைவுபெற்று, இங்கிருந்து சிறியரக செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இங்கு இஸ்ரோ அலுவலகம், ராக்கெட் ஏவுதளகட்டிடம், பராமரிப்பு பணி மனை மற்றும் ஒரே நேரத்தில் 3 ஹெலிகாப்டர்கள் தரையிறங்கும் வகையிலான ஹெலிபேடு போன்றவை அமைக்கப்பட்டு உள்ளன.

தனியாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை

ராக்கெட் ஏவுதள கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், இதன் செயல்பாடு மற்றும் நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ஏவுதளத்தின் செயல்பாடு, மேலாண்மை பணிகளை மேற்கொள்ள இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட தகுதியான தனியார் நிறுவனங்களிடம் இருந்து விருப்பம் கோருவதற்கான நடவடிக்கையை இந்திய தேசிய விண் வெளி அங்கீகார மற்றும் மேம்பாட்டு மையம் (இன்-ஸ்பேஸ்) மேற் கொண்டுள்ளது.தேர்வு செய்யப்படும் தனியார் நிறுவனமானது, குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தின் அன்றாட செயல்பாடுகள் மற்றும் நிர்வாக பணிகளை மேற்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் தனியார் விண்வெளி நிறுவனங்கள் தங்களது ராக்கெட்டு கள், செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான வசதியை அதிகளவில் பயன் படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஞ்ஞானிகள் விளக்கம்

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகையில், "குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் தனியாருக்கு விற்பனை செய்யப்படவில்லை. ஏவுதளத்தின் உரிமையை தனியாரிடம் ஒப்படைப்பது தொடர்பான அறிவிப்பு எதுவும் இல்லை. மாறாக, ஏவுதளத்தின் செயல்பாடு மற்றும் நிர்வாகத்தை தனியார் நிறுவனத்திடம் வழங்குவதற்கான நடவடிக்கையே தற்போது மேற்கொள்ளப்படுகிறது. இந்த நடவடிக்கை இந்தியாவின் விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும்" என்றனர்.

பொதுமக்கள் எதிர்ப்பு

எனினும் ராக்கெட் ஏவுதள செயல்பாடுகள், நிர்வாகம் தனியார்மயமாவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தை தனியாரிடம் ஒப்படைப்பது ஏற்புடையது அல்ல. இஸ்ரோவுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு இங்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்” என்றனர். இதனால் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com