குறுகலான தற்காலிக சாலை அகலப்படுத்தப்படுமா?

கோடியக்கரையில் தரைப்பாலம் அமைக்கும் பணிக்காக அமைக்கப்பட்ட குறுகலான தற்காலிக சாலை அகலப்படுத்தப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
குறுகலான தற்காலிக சாலை அகலப்படுத்தப்படுமா?
Published on

வேதாரண்யம்:

கோடியக்கரையில் தரைப்பாலம் அமைக்கும் பணிக்காக அமைக்கப்பட்ட குறுகலான தற்காலிக சாலை அகலப்படுத்தப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

மீன்பிடி சீசன்

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் கோடியக்கரை, கோடியக்காடு ஊராட்சிகள் அமைந்துள்ளன. இந்த இரண்டு ஊராட்சிகளிலும் 9 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.

தற்போது கோடியக்கரை பகுதியில் மீன்பிடி சீசன் காலம் என்பதால் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஆயிரக்கணக்கில் தங்கி மீன்பிடித்து தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் இந்த பகுதியில் பிடிக்கப்படும் மீன்களை வாங்க பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.

தரைப்பாலம்

கோடியக்கரையில் இருந்து கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீன்களை வாங்க கோடியக்கரைக்கு தினமும் பல்வறு வாகனங்கள் வந்து செல்கின்றன.

கோடியக்கரையில் கழுங்கு தரைப்பாலம் 1942-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு தரைப்பாலம் இடிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்காலிக சாலை

இந்த பகுதியில் தரைப்பாலம் அமைக்கப்படுவதால் வாகனங்கள் செல்ல தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை குறுகலாக இருப்பதால் இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல முடிகிறது. இதன் காரணமாக அந்த பகுதி பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், மீன் வியாபாரிகள், பள்ளி மாணவ, மாணவிகள் 2 கிலோ மீட்டர் சுற்றி கோடியக்கரைக்கு செல்ல வேண்டி நிலை உள்ளது.

அரசு பஸ்கள் பாலப்பணி நடைபெறும் இடத்திற்கு முன்பே நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டு செல்கிறது. அங்கிருந்து பொதுமக்கள், மாணவர்கள் நடந்து செல்கின்றனர்.

அகலப்படுத்த வேண்டும்

கோடியக்காடு- கோடியக்கரையை இணைக்கும் ஒரே பிரதான சாலையில் தரைப்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால் தற்காலிக சாலையை அகலப்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோடியக்கரை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் நெடுஞ்சாலைதுறையினர் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அனைத்து பஸ்களையும் கோடியக்கரை வரை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

பஸ் இயக்க நடவடிக்கை

அதன் பேரில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கோடியக்கரைக்கு வந்து பார்வையிட்டு இன்று முதல் தொடர்ந்து தற்காலிக சாலையில் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். தற்காலிக சாலையில் சிறியரக வாகனங்கள் செல்லும் வகையில் அகலப்படுத்தப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com