கைகொடுக்குமா வடகிழக்கு பருவமழை? சென்னையின் குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு குறைவு!

தற்போது பருவமழை பெய்து வரும் நிலையில் தண்ணீர் வினியோகம் குறைப்பு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
கைகொடுக்குமா வடகிழக்கு பருவமழை? சென்னையின் குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு குறைவு!
Published on: 

சென்னை,

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு கடந்த ஆண்டை விட 50 சதவீ தம் குறைவாக உள்ளது. வடகிழக்கு பருவமழை கை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

50 சதவீதம் குறைவு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரிகள் உள்ளன.

இந்த ஏரிகளில் மொத்தம் 13.222 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த வாரம் முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக விட்டுவிட்டு பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. எனினும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு கடந்த ஆண்டு ஒப்பிடும்போது பாதி அளவே உள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் குடிநீர் ஏரிகளில் 9.738 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருந்தது. ஆனால் நேற்று காலை நிலவரப்படி ஏரிகளில் மொத்த தண்ணீர் இருப்பு 5.139 டி.எம்.சி.யாக உள்ளது. இது கடந்த ஆண்டு விட சுமார் 50 சதவீதம் குறைவாக உள்ளது.

தண்ணீர் வினியோகம் குறைப்பு

இருப்பினும் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வரும் நாட்களில் கன மழை பெய்து ஏரிகளுக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தற்போது சென்னையில் குடிநீர் வாரியம் தினசரி தண்ணீர் வினியோகத்தை 42 மில்லியன் லிட்டராக குறைத்துள்ளது. தற்போது பருவமழை பெய்து வரும் நிலையில் தண்ணீர் வினியோகம் குறைப்பு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. போதுமான அளவு தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை நிலவரப்படி புழல் ஏரிக்கு வினாடிக்கு 1126 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3.300 டி.எம்.சி.யில் 2.248 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. அதாவது 68.12 சதவீதம் ஆகும்.

இதே போல் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 520 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 555 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3.645 டி. எம்.சி.யில் 1.435 டி எம் சி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் 3.231 டி.எம்.சி.யில் 468 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இதேபோல் வீராணம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1.463 டி.எம்.சி. யில் 468 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 340 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com