குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?

ஆனைமலை-வெப்பரை இடையே குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?
Published on

ஆனைமலை

ஆனைமலை-வெப்பரை இடையே குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

குண்டும், குழியுமான சாலை

ஆனைமலை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இங்கு விளையும் விளை பொருட்களை விற்பனைக்காக ஆனைமலை, பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்கின்றனர். இவ்வாறு காய்கறிகளை ஏற்றிக்கொண்டு வருபவர்கள் குண்டும், குழியுமான சாலை, மண் சாலை உள்ளிட்ட பல்வேறு தடைகளை தாண்டி தான் வருகின்றனர்.

ஆம்... ஆனைமலையில் இருந்து பல கிராமங்களுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக தான் உள்ளது. குறிப்பாக ஆனைமலையில் இருந்து வெப்பரை செல்லும் சாலை வழி தான் சுள்ளிமேட்டுப்பதி, எம்.ஜி.ஆர்.நகர், காக்காகுத்திபாறை, கே.பி.எம். காலனி உள்ளிட்ட கிராமங்களுக்கு முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் விவசாய நிலங்களுக்குள் செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

வாகன ஓட்டிகள் அவதி

மேலும் இந்த வழித்தடத்தில் தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளன. இதுதவிர ஆழியாற்றங்கரைக்கு குளிக்க வருபவர்களும் இந்த சாலை வழியாக தான் சென்று வருகின்றனர். அவர்கள் குண்டும், குழியுமான சாலையால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இதுதவிர சாலையின் இருபுறமும் புதர்கள் சூழ்ந்து கிடக்கிறது. மேலும் மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த சாலையை விரைந்து சீரமைத்து, சாலையோரங்களில் உள்ள புதர்களை அகற்றி, மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்தி தர ஆவண செய்வார்களா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அதிகாரிகள் அலட்சியம்

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

ஆனைமலை-வெப்பரை சாலையில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. அதன் பின்னர் சாலை குண்டும், குழியுமாக மாறியதால், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பஸ் நிறுத்தப்பட்டது. மேலும் பேரிடர் காலங்களில் தீயணைப்பு வாகனம், ஆம்புலன்சுகள் உள்ளிட்ட வாகனங்கள் வரவும் தாமதம் ஏற்படுகிறது.

இதுதவிர குண்டும், குழியுமான சாலையால் எங்கள் விளைநிலங்களில் விளையும் நெல், வாழை, தேங்காய் உள்ளிட்ட பொருட்களை ஆனைமலைக்கு கொண்டு செல்ல மிகவும் சிரமப்படுகிறோம். சில நேரங்களில் டிராக்டர்கள், தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு வரும் லாரிகள் சேற்றில் சிக்கி கொள்கின்றன. இதனால் பிற வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் இரவு நேரங்களில் மின்விளக்கு வசதிகள் இல்லாதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பேரூராட்சி அதிகாரிகளிடம் கேட்டால், ஊராட்சி ஒன்றிய சாலை என்று கூறுகின்றனர். அவர்களிடம் கேட்டால் பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது என்று தெரிவித்தனர். பொதுப்பணித்துறையிடம் கேட்டபோது, பேரூராட்சி உடையது என்று மாறி, மாறி கூறிகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com