ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?

சுப்பையகவுண்டன் புதூர் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?
Published on

ஆனைமலை, 

சுப்பையகவுண்டன் புதூர் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

ரெயில்வே கேட்

ஆனைமலை சுற்றி உள்ள ஆழியார், பரம்பிக்குளம், வால்பாறை, டாப்சிலிப் போன்ற சுற்றுலா தலங்களுக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மேலும் மாசாணியம்மன் கோவிலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வருகிறார்கள்.

இந்தநிலையில் ஆனைமலை-பொள்ளாச்சி ரோட்டில் சுப்பையகவுண்டன் புதூர் பகுதியில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த வழியாக காலை 8.40 மணிக்கு பாலக்காடு செல்லும் ரெயில் கடந்து செல்கிறது. அதேபோல் மாலை 4.35 மணியளவில் பாலக்காட்டில் இருந்து ரெயில் வருகிறது. அந்த சமயங்களில் ரெயில்வே கேட் மூடப்படுவதால், வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நிற்கின்றன. இதனால் ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் காத்திருந்து செல்ல வேண்டி நிலை உள்ளது.

நெரிசலில் சிக்கி தவிப்பு

மேலும் ஆனைமலையை தாலுகாவாக அறிவித்து 3 ஆண்டுகளை கடந்தும், போதிய மருத்துவமனை இல்லாததால் அவசர தேவைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியை நம்பியே மக்கள் உள்ளனர். இதனால் ரெயில் கடந்து செல்லும் நேரத்தில் நோயாளிகளை அழைத்து செல்லும் ஆம்புலன்ஸ்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்கின்றன. காலை மற்றும் மாலை நேரத்தில் கூட்ட நெரிசல் நிறைந்த குறிப்பிட்ட நேரத்தில் ரெயில்வே கேட் மூடப்படுவதால், வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். இதனை தடுக்க சுப்பையகவுண்டன் புதூர் ரெயில்வே கேட் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

ஆனைமலை-பொள்ளாச்சி ரோட்டில் சுப்பைய கவுண்டன் புதூர் ரெயில்வே கேட்டில் காலையும், மாலையும் ரெயில் கடந்து செல்லும் நேரத்தில் ரெயில்வே கேட் மூடப்படுவதால் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஆனைமலை தாலுகாவை சுற்றி உள்ள சுற்றுலா தலங்களுக்கு வருபவர்கள், மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது.

எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ரெயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com