தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் விரைவில் மாற்றம்?

தேர்தல் முடிவு வெளியான உடனே த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, காங்கிரஸ் நிபந்தனையுடன் ஆதரவு அளித்தது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் விரைவில் மாற்றம்?
Published on

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விரைவில் மாற்றப்பட்டு புதிய தலைவர் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தி.மு.க.வுடன் கூட்டணி

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் காங்கிரஸ் கட்சி 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது. இதில் காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று 9 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களிலும் வெற்றி பெற்றது.

அதேபோன்று 2026 சட்டமன்ற தேர்தலையும் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து செல்வப்பெருந்தகை தலைமையிலேயே காங்கிரஸ் கட்சி 28 இடங்களில் போட்டியிட்டது. ஆனால், இந்த தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க பெரும்பாலான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விரும்பவில்லை.

5 தொகுதிகளில் வெற்றி

ஆனால், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் உள்ளிட்டோரின் பகீரத முயற்சியினால் தான் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி அமைந்தது. மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்கள் தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேர்தல் முடிவு வெளியான உடனே அவசர அவசரமாக த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, த.வெ.க. அரசுக்கு காங்கிரஸ் நிபந்தனையுடன் ஆதரவு அளித்தது.

த.வெ.க.வுடன் கூட்டணி

அதன்படி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இருப்பினும், தேர்தலில் ஆரம்பத்திலேயே த.வெ.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து இருந்தால் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 50-க்கும் மேற்பட்டோர் எம்.எல்.ஏ.க்களாக ஆகி இருப்பார்கள் என்றும், 5-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கூட்டணி அரசில் இடம் பெற்றிருப்பார்கள் என்பதும் பெரும்பாலான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் எண்ணமாக தற்போதும் இருந்து வருகிறது.

இந்த நிலையில், தேர்தல் கூட்டணி அமைத்த பின்னர், தேர்தலுக்கு முன்பே தான் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொள்ள செல்வப்பெருந்தகை விருப்பம் தெரிவித்து விட்டார். அதே போன்று அண்மையிலும் தான் தலைவர் பதவியில் இருந்து விலகத்தயாராக இருப்பதாகவும், காங்கிரஸ் கட்சி தன்னை விடுவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் செல்வப்பெருந்தகை பேட்டி அளித்து இருந்தார்.

காங்கிரஸ் தலைவர் பதவி

அந்த வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகை எப்போது வேண்டுமானாலும் மாற்றம் செய்யப்பட்டு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. புதிய மாநில தலைவர் பதவிக்கு மாணிக்கம் தாகூர், டாக்டர் செல்லக்குமார், ஜோதிமணி ஆகியோர் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், அதில் மாணிக்கம் தாகூர் மாநிலத் தலைவராக அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com