ஊரக வேலைத்திட்ட விவகாரத்தில் பச்சைப் பொய்யை அவிழ்த்துவிடும் எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின் விளாசல்

100 நாட்கள் வேலை திட்டத்தை நிறைவேற்றாமல், சம்பளமும் வழங்காமல் பா.ஜ.க. அரசு அலைக்கழித்ததாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஊரக வேலைத்திட்ட விவகாரத்தில் பச்சைப் பொய்யை அவிழ்த்துவிடும் எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின் விளாசல்
Published on

சென்னை,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைதிட்டத்துக்கு பதிலாக புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

விபி ஜி ராம்-ஜி திட்டத்தால் 125 நாட்கள் வேலை கிடைக்கப் போகிறதா? அதைப் பாராட்ட எங்களுக்கு மனமில்லையா?

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைதிட்டம் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக் குரல் கொடுக்கத் துணிவின்றி, மீண்டும் மீண்டும் பச்சைப் பொய்யை அவிழ்த்துவிடுகிறார் பழனிசாமி. ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை என்பது சட்டமாக இருந்தபோதே அதை நிறைவேற்றாமல், சம்பளமும் வழங்காமல் அலைக்கழித்த பா.ஜ.க. அரசு இப்போது 1008 நிபந்தனைகளுடன் நிறைவேற்றும் புதிய திட்டத்தில் 125 நாட்கள் வேலை தரப்போகிறதா?

உண்மையைச் சொன்னால், ஒருநாள் வேலைக்குக் கூட இனி ஒன்றிய அரசு உத்தரவாதம் கொடுக்காமல் கடமையைக் கைகழுவியுள்ளது. மகாத்மா காந்தி பெயரை நீக்கக்கூடாது என்று உங்கள் ஓனருக்கு வலிக்காமல் அழுத்தம் கொடுத்தீர்களே... என்ன ஆனது? உங்களை ஒரு பொருட்டாகவே டெல்லி மதிக்கவில்லையே. மாநில அரசின் மீது 40% நிதிச்சுமையை ஏற்றும் எதேச்சாதிகாரமும் கைவிடப்படவில்லையே?

டெல்லியை எதிர்த்துக் கேள்வி கேட்கும் துணிவு உங்களுக்கு இருக்குமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் முட்டுகளையாவது தவிர்க்கலாம். வறுமையை ஒழித்து, மக்களின் மாண்பை உயர்த்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பா.ஜ.க. அரசால் குழிதோண்டி புதைக்கப்படுவதற்கு வக்காலத்து வாங்கி, உங்களது அரசியல் வாழ்க்கையின் முடிவுரையை நீங்களே எழுதிக் கொள்கிறீர்கள் என்பதை மட்டும் நினைவூட்டுகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com