

நெல்லை,
தேர் திருவிழா
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றாக நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவில் திகழ்கிறது. இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதில் ஆனிப்பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு ஆனிப்பெருந்திருவிழா வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. தேரோட்டத்தின் போது 4 ரத வீதிகளிலும் தேருக்கு முன்பாக காந்திமதி யானை அசைந்தாடி நடந்து செல்லும்.
புதிய யானை
இந்த நிலையில் காந்திமதி யானை கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் திடீரென்று உயிரிழந்தது. இதனால் கடந்த ஆண்டு ஆனி தேர் திருவிழாவின் போது யானை இல்லாமல் தேர் வலம் வந்தது. எனவே இந்த ஆண்டு தேர் திருவிழாவின்போது யானை கொண்டு வரப் பட்டால் நன்றாக இருக்கும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய யானை குட்டி வாங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து ஆண் யானை குட்டி ஒன்றை கொண்டு வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அந்த குட்டி யானையின் உருவ படமும் சமூக வலைதளத்தில் வெளியானது. ஆனால் 6 மாதங்களுக்கு மேலாகியும் அந்த யானை குட்டி நெல்லைக்கு வரவில்லை.
இந்த நிலையில் ஆனித்திருவிழாவுக்கு சில நாட்களே உள்ள நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து யானை குட்டியை கொண்டு வந்து இந்த தேரோட்டத்தின் போது ரத வீதிகளில் வலம்வர செய்ய வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.