சாலையோர ஆக்கிரமிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா?

குளித்தலை நகர பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா? என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சாலையோர ஆக்கிரமிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா?
Published on

கடைகள் ஆக்கிரமிப்பு

குளித்தலை நகரப்பகுதிக்கு உட்பட்ட குளித்தலை சுங்ககேட் முதல் பெரிய பாலம் வரை பலதரப்பட்ட கடைகள் உள்ளன. சாலையோரம் உள்ள கடைகளின் உரிமையாளர்கள், வாடகைக்கு கடை நடத்தி வருபவர்கள் தங்கள் கடைகளின் முன்பு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து மேற்கூரை அமைத்தல், சாலையோரம் வரை தங்கள் கடைகளை கொண்டு வருதல் போன்ற ஆக்கிரமிப்புகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி குளித்தலை சுங்ககேட், பஸ் நிலையம் போன்ற நகரின் முக்கிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு கடையாக சென்று சாலையோர ஆக்கிரமிப்பு செய்த கடைக்காரர்களிடம், அவர்களுக்கான உரிய இடத்தில் மட்டுமே தங்கள் கடையை நடத்த வேண்டும் என்றும், வாகனங்களை நிறுத்த போதிய இடம் விடவேண்டும் என்றும், அதை மீறி நடப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

குளித்தலை நகரப்பகுதியில் கடை நடத்தி வரும் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் உடனடியாக அனைத்து ஆக்கிரமிப்புகளையும் பகுதிவாரியாக தினசரி அகற்றுவதோடு, எந்தெந்த பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது என்பது குறித்தும் தனக்கு முறைப்படி அதிகாரிகள் தகவல் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

காவல்துறை மூலம் நடவடிக்கை

இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. குளித்தலை பஸ் நிலையம் பகுதியில் உள்ள கழிவுநீர் செல்லும் வாய்க்காலின் மேல்பகுதி வரை பலர் ஆக்கிரமிப்பு செய்து தங்களது கடைகளை நடத்தி வந்தனர். தற்போது கழிவுநீர் வாய்க்காலின் மேல் போடப்பட்டிருந்த சிமெண்டு பலகை அகற்றப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை மூலம் புதிய கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி மேற்கொள்ள பின்வரும் காலங்களில் உரிய மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அகற்றப்பட்டுள்ள இடத்தில் மீண்டும் கடை உரிமையாளர்கள் ஆக்கிரமிப்பு செய்யும் பட்சத்தில் அந்த கடை உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு அவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அப்போது தெரிவித்திருந்தனர்.

ஆனால் கடந்த ஆண்டு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பின்னர் சில நாட்களிலேயே பலர் மீண்டும் ஆக்கிரமித்தனர். தற்போது வரை அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.

இது குறித்து பொதுமக்கள் கூறிய கருத்துக்கள் பின் வருமாறு:

வாடிக்கையாளர்கள் சிரமம்

குளித்தலையில் கடை நடத்தி வரும் பாபு கூறியதாவது:- போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாலையை அகலப்படுத்தும் நோக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். ஒருமுறை ஆக்கிரமிப்ப அகற்றினால் அதோடு அவர்கள் பணியை முடித்துக் கொள்கிறார்கள். கடை முன்பு உள்ள கழிவுநீர் வாய்க்காலின் மேல் போடப்பட்டுள்ள சிமெண்டு பலகைகளை கூட அப்புறப்படுத்தி விடுகிறார்கள். அப்படி செய்யும்பொழுது கடைக்கு வாடிக்கையாளர்கள் வர முடியாமல் சிரமம் ஏற்படுகிறது. இதனால் வியாபாரிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக கடை உரிமையாளர்கள் மீண்டும் மேற்கூரை அமைத்தல் போன்ற பணிகளை செய்கின்றனர். சுமார் 6 மாத காலத்திற்கு பிறகு மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் பொழுது வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஒரு முறை ஆக்கிரமிப்பு அகற்றப்படும் பொழுது அந்த கடை உரிமையாளருக்கு அவர் கடை நடத்தி வருவதற்கான இடம் எது என்பதையும் அதிகாரிகள் வரையறுத்து சொல்லவேண்டும். மழை மற்றும் வெயில் காலங்களில் சாலையோரத்தில் உள்ள கடைகள் பாதிக்காத அளவிற்கு மேற்கூரை அமைக்க அதிகாரிகள் வரையறை செய்து கொடுக்கலாம். அப்படி செய்தால் வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

பணிகள் பாதியிலேயே நிறுத்தம்

குளித்தலையை சேர்ந்த பிரபாகரன்:-

அதிகாரிகள் ஒருமுறை ஆக்கிரமிப்பை அகற்றிய பின்னர் அந்த பணியை கிடப்பில் போட்டு விடுகின்றனர். இதனால் கடை உரிமையாளர்கள் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்கின்றனர். சில மாதங்களுக்கு பின்னர் மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்கிறது. எதனால் இந்த பணிகள் பாதியிலேயே நிறுத்தப்படுகிறது என்று தெரியவில்லை. மேலும் இதற்கு நிரந்தர தீர்வும் ஏற்படுவதில்லை.

இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த ஆக்கிரமிப்பு பணிகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மாற்று ஏற்பாடு வேண்டும்

மணத்தட்டை பகுதியை சேர்ந்த முத்துச்செல்வன்:- நெடுஞ்சாலைத்துறை மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது நல்ல விஷயம். ஆனால் சாலையோர வியாபாரிகள் பலர் வியாபாரம் செய்கின்றனர். அன்று அவர்களுக்கு கிடைக்க கூடிய வருவாயை கொண்டே அவர்கள் தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அப்படி இருக்கும் பட்சத்தில் சாலையோர கடைகளை அகற்றும் பொழுது அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அவர்கள் கடை நடத்த மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும். அதுபோல ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் இருக்கிறது.

பணம் இருப்பவர்களுக்கு ஒரு மாதிரியாகவும் பணம் இல்லாதவர்களுக்கு ஒரு மாதிரியாகவும் நடவடிக்கை எடுக்கக்கூடாது. நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் அரசு துறையோ அல்லது தனியார் கட்டிடமோ, கடைகளோ கட்டப்பட்டிருந்தால் அவற்றை எந்த ஒரு பாரபட்சமும் இல்லாமல் அதிகாரிகள் அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com