

கரூர்,
இன்று காலை கரூர் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜய் கைது செய்யப்படுவாரா? என செய்தியாளர் ஒருவர் முதல்-அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். அப்போது அதற்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
அதற்கு தான் உயர்நீதிமன்றத்தினுடைய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படிருக்கிறது. அந்த ஆணையம் விசாரித்து முழுமையாக சொல்லும். இதற்கிடையில், நீங்கள் கேட்பது போல அரசியல் நோக்கத்தோடு எதையும் நான் சொல்ல விரும்ப வில்லை. மீண்டும் மீண்டும் இதை தான் சொல்லப்போகிறேன்.
ஆணையம் அதற்காக தான் அமைத்திருக்கிறோம். ஆணையத்தின் மூலம் உண்மை வெளிவரும். உண்மை வெளி வரும்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.