தேசிய ஜனநாயக கூட்டணியில் எங்களுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு? - டிடிவி தினகரன் பதில்

மக்கள் நலனை கருத்தில் கொண்டு நல்ல முடிவை நோக்கி நகர்வோம் என்று டிடிவி தினகரன் கூறினார்.
ஆண்டிபட்டி,
ஆண்டிபட்டியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
எனக்கும், அமமுகவிற்கும் யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது. எங்களை அணுகி கூட்டணிக்கு வர வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் பேசி வருகின்றன. நாங்கள் எந்த கூட்டணில் இருந்தாலும் ஆண்டிபட்டி தொகுதியில் அமமுக வேட்பாளர்தான் கண்டிப்பாக போட்டியிடுவார் எங்களுக்கு எந்த கூட்டணி வேண்டும் என்பதை நாங்களே முடிவு செய்வோம். அமமுகவை தவிர்த்துவிட்டு யாராலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் எங்கள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக கூறுவது வதந்தி. கூட்டணியே இன்னும் அமையாதபோது தொகுதிகள் ஒதுக்கீடு என வதந்தி பரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் தற்போது தவிர்க்க முடியாத அரசியல் கட்சியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளது; எங்கள் கட்சிக்கான கட்டமைப்பு பலமாக இருக்கிறது.
சுயநலத்திற்காக விலை போகாத நிர்வாகிகள் எங்களிடம் உள்ளனர். எனவே தை பிறந்த பின்னர் ஜெயலலிதா பிறந்த நாளை தொடர்ந்தே கூட்டணி குறித்து முடிவெடுப்போம். தமிழக மக்கள் நலனை கருத்தில் கொண்டு நல்ல முடிவை நோக்கி நகர்வோம். எந்த கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம். எங்களை ஏற்றுக் கொள்வது தேவையில்லை. நாங்கள் யாரை ஏற்று கொள்வோம் என்ற வகையில் தான் காய் நகர்த்துவோம் என்று தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.






