

மதுரை,
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் பிரசாரம் வருகிற 21-ந்தேதி மாலையுடன் முடிவடைகிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால் தலைவர்கள் சூறாவளியாக சுற்றுப்பயணம் செய்து தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், மதுரையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் பிரகாஷ்ராஜ் பிரசாரம் செய்தார். அப்போது மதுரை மத்தி தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் சுந்தர்.சி-க்கு நடிகர் பிரகாஷ் ராஜ் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து பேசினார்.
அவர் கூறியதாவது:- “கலைஞர் கருணாநிதி இந்த நாட்டுக்கு செய்திருக்கிற பணி அதிகம், இந்த மக்களை நேசித்து நேசித்து வாழ்ந்தது அதிகம், இந்த மக்கள் மண்ணுக்காக வாழ்ந்தது அதிகம். இந்த மக்களுக்காக இன்றைக்கும் பேசுகிறேன் என்றால் நன்மை செய்பவர்களைத்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். நான் எந்த கட்சிக்காரனும் கிடையாது, நான் எம்.எல்.ஏ ஆக தேவையில்லை, எம்.பி ஆக தேவையில்லை.
வேட்பாளராக ஆக்கப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்பு வரை சினிமா சூட்டிங்கில் இருந்தீர்கள். எந்த அரசியல் பிரச்சினைகளுக்கோ அல்லது மதுரை மக்களுக்காகவோ குரல் கொடுக்காமல், வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் எம்.எல்.ஏ. ஆக வேண்டுமென வந்துவிட்டால்... மதுரை மக்கள் என்ன ஏமாளிகளா?
புதிய நீதிக்கட்சியில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்..? அதன் கொள்கை என்ன?. சினிமாவில் இயக்குநர் ஆவதற்கு எத்தனை விஷயங்களை கஷ்டப்பட்டு கற்றிருப்பீர்கள். ஆனால், எம்.எல்.ஏவாக மட்டும் உடனே ஆகிவிடுவீர்களா?.
உங்கள் மனைவி 10 வருடங்களாக அரசியல் செய்து கேள்விகளை கேட்கிறார். அவருக்கு கிடைக்காத சீட் உங்களுக்கு எப்படி கிடைத்தது என யோசிக்க மாட்டீர்களா?. இந்த சீரழிவை நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.