அரசு மருத்துவக் கல்லூரிகளில் ரூ.13 ஆயிரத்திற்குப் பதில் ரூ.5.44 லட்சம் கல்விக் கட்டணம் வசூலிப்பதா? - மு.க.ஸ்டாலின் கண்டனம்

சில அரசு மருத்துவக் கல்லூரிகளில் 13 ஆயிரத்திற்குப் பதில் 5 லட்சத்து 44 ரூபாய் கல்விக்கட்டணம் வசூலிப்பதா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் ரூ.13 ஆயிரத்திற்குப் பதில் ரூ.5.44 லட்சம் கல்விக் கட்டணம் வசூலிப்பதா? - மு.க.ஸ்டாலின் கண்டனம்
Published on

சென்னை,

சில அரசு மருத்துவக் கல்லூரிகளில் 13 ஆயிரத்திற்குப் பதில் 5 லட்சத்து 44 ரூபாய் கல்விக்கட்டணம் வசூலிப்பதா? என கேள்வி எழுப்பியுள்ள தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அங்கு கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அரசு மருத்துவக் கல்லூரிகளாகச் செயல்பட்டு வரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கும், ஈரோடு ஐ.ஆர்.டி பெருந்துறை மருத்துவக் கல்லூரிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளது போல் கட்டணத்தை அ.தி.மு.க. அரசு உயர்த்தி இருப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

அரசு மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் 13,670 ரூபாய். பல் மருத்துவக் கல்லூரிக் கட்டணம் 11,610 ரூபாய் என்று சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின்,இந்தக் கட்டணங்களை ஈரோடு ஐ.ஆர்.டி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியிலும், ராஜா முத்தையா மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரியிலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளது போல் கல்விக்கட்டணம் வசூல் செய்வது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசுக் கல்லூரி அடிப்படையில் கவுன்சிலிங், கட்டண வசூல், தனியார் கல்லூரி மாதிரி என்பது கொடுமையாக இருக்கிறது என அவர் விமர்சித்துள்ளார்,

இடஒதுக்கீட்டால் பயனடைந்த மாணவர்களின் கல்விக் கனவை "அதிகக் கட்டணம்" என்ற பெயரில் பறிப்பதாகவே அ.தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என தி.மு.க. தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுமட்டுமின்றி, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு வருமான வரம்பை 2 லட்சத்தில் இருந்து என்று 8 லட்சம் ரூபாயாக உயர்த்தினால்தான் சமூக நீதியும், ஏழை எளிய நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கனவும் நிறைவேற்றப்படும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

"அரசுப் பள்ளியில் படித்ததால் அவர்கள் கஷ்டம் தனக்குத் தெரியும்" என்று கோபப்பட்ட முதலமைச்சர் பழனிசாமி, இந்தக் கல்விக் கட்டணத்தைக் குறைத்து - அரசுக் கல்லூரி மருத்துவ மாணவர்களின் நலனில் அக்கறை இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com