

சென்னை,
அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாநிலம் முழுவதும் மின்சார தேவை உயர்ந்து வருகிறது. இந்த சூழலில் காற்றாலை மின்சாரம் மின்தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் மே மாதம் தொடங்கி செப்டம் பர் மாதம் வரை காற்றாலை சீசன் நீடிப்பது வழக்கம். காற்றாலை மின் உற்பத்திக்கக மாநிலம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்து 100 மெகாவாட் முதல் 11 ஆயிரத்து 830 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. காற்று அதிகமாக வீசும் சீசன் காலங்களில் தினசரி சராசரியாக 4 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் குஜராத் மாநிலம் முதலிடத்தில் உள்ள நிலையில், தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள முப்பந்தல் காற்றாலைப் பண்ணை, இந்தியாவின் மிகப்பெரிய காற்றாலை மையங்களில் ஒன்றாகவும், உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது கோடை வெயில் கடுமையாக நிலவி வருகிறது. இதன் காரணமாக வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்சார பயன்பாடு அதிகரித்து. தினசரி மின்சார தேவை 21 ஆயிரம் மெகாவாட்டை நெருங்கி வருகிறது. சில பகுதிகளில் மின்தடையும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், காற்றாலை மின்சார உற்பத்தி சீசன் தொடங்கியுள்ளதால், அடுத்த சில வாரங்களில் மின்சார உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அதிகரித்து வரும் மின்சார தேவையை சமாளிக்க முடியும் என்று தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய காற்றாலை மின்சார உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நடப்பாண்டுக்கான காற்றாலை மின்சார உற்பத்தி சீசன் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. முதல் நாளிலேயே 57 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட் டுள்ளது. சீசன் தொடங்கியுள்ளதால் வரும் நாட்களில் மின் உற்பத்தி தொடர்ந்து அதிகரிக்கும். ஆண்டுதோறும் 6 அல்லது 7 மாதங்கள் மட்டுமே காற்றாலை சீசன் நீடிக்கும். சீசன் முடிந்த பின்னர் மின் உற்பத்தி குறையும். இருப்பினும், தென்மேற்குப் பருவக்காற்று தொடங்கியுள்ளதால், இந்த ஆண்டும் காற்றாலை மின்சார உற்பத்தி கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது” என்றார்.