தூத்துக்குடி விமான நிலையம் அருகே விதிகளை மீறி காற்றாலைகளா? - மத்திய-மாநில அரசுகள், கலெக்டருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

தூத்துக்குடி விமான நிலையம் அருகே விதிகளை மீறி காற்றாலை உள்ளது குறித்து பதில் அளிக்க, மத்திய-மாநில அரசுகள், கலெக்டருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மதுரை,

சென்னை அடையாறை சேர்ந்த குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் எனது தொழில் விஷயமாக தூத்துக்குடி மாவட்டத்துக்கு சென்று இருந்தேன். இந்த பகுதிகளில் சுற்றி பார்த்த போது சுமார் 1500-க்கும் மேற்பட்டவர்கள் காற்றாலைகளை அமைத்து உள்ளனர். இது குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் கேட்டபோது, பலர் காற்றாலை அமைத்த இடங்களில் முறையான அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தது. தூத்துக்குடி விமான நிலையத்திற்கு அருகில் 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு காற்றாலைகள் அமைக்கக்கூடாது என விதிமுறைகள் உள்ளன. ஆனால் அதையும் மீறி பலர் காற்றாலைகள் மற்றும் அதற்குரிய ஜெனரேட்டர்களை நிறுவி உள்ளனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தும் பலன் இல்லை. எனவே காற்றாலைகள் அமைக்கும் பகுதிகளை முறைப்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில், இதுகுறித்து மத்திய-மாநில அரசுகள், விமான போக்குவரத்துத்துறை, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் 11-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com