தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவி ஏற்பு 11-ந்தேதி மறைமுக தேர்தல்

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று (திங்கட்கிழமை) காலை பதவி ஏற்றுக் கொள்கின்றனர். தொடர்ந்து வரும் 11-ந்தேதி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடக்கிறது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவி ஏற்பு 11-ந்தேதி மறைமுக தேர்தல்
Published on

சென்னை,

தமிழக ஊரக உள்ளாட்சிகளுக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம் நேற்று முன்தினம் முழுமையாக வெளியிடப்பட்டது. இதில் 27 மாவட்டங்களில் உள்ள 2 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவியிடங்கள் தவிர்த்து மீதம் உள்ள 513 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் விவரம் வெளியானது. இதேபோன்று 3 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியிடங்கள் தவிர்த்து 5 ஆயிரத்து 87 பதவியிடங்களுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் விவரம் வெளியிடப்பட்டது.

இதேபோன்று 10 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்கள் தவிர்த்து மீதம் உள்ள 9 ஆயிரத்து 614 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் விவரம் வெளியானது. அதேபோல், தற்போது 76 ஆயிரத்து 712 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் விவரம் மட்டும் வெளியிடப்பட்டு உள்ளது.

வெற்றி பெற்றவர்களுக்கான பதவி ஏற்பு விழா இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அப்பகுதியில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில் பதவி ஏற்று கொள்கின்றனர். அதேபோல், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் மாவட்ட தலைநகரங்களில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து அலுவலகங்களில் பதவி ஏற்றுக் கொள்வார்கள்.

ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தங்களுக்கு தேர்தல் அதிகாரியாக செயல்பட்ட அதிகாரி முன்னிலையில், மூத்த உறுப்பினர் முதலில் தன்னைதானே பதவி ஏற்றுக் கொண்டு, மீதம் உள்ளவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்கள்.

இதேபோன்று ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் மூத்த உறுப்பினர்கள் தனக்கு தானே பதவி பிரமாணம் எடுத்து கொண்ட, மீதம் உள்ளவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்கள். மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முன்னிலையில் மூத்த உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டு, மற்ற உறுப்பினர்களுக்கும் பதவி பிரமாணம் செய்து கொள்வார்கள்.

மாவட்ட பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் அதிகபட்சமாக 15 முதல் 20 வரை மட்டுமே இருப்பதால் பதவி ஏற்பு விழா அதிகபட்சம் ஒரு மணி நேரத்திற்குள் முடிவடைந்து விடும். அதேபோல் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அதிகபட்சம் 10 பேர் என்ற அளவில் இருப்பதால் பதவி ஏற்பு விழா அரை மணி நேரத்தில் முடிவடைந்து விடும்.

இதனை தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவியிடங்களுக்கு மறைமுக தேர்தல் வரும் 11-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.

இந்த தேர்தலில் ஏற்கனவே பதவி ஏற்றுக் கொண்டுள்ள ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் ஓட்டு போட்டு, ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர்களை தேர்வு செய்வார்கள். அதேபோல் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத்தலைவரை ஏற்கனவே பதவி ஏற்றுள்ள மாவட்ட கவுன்சிலர்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்வார்கள். வெற்றி பெற்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர்கள் ஓட்டு விவரம் எண்ணப்பட்டு உடனுக்குடன் அறிவிக்கப்படும்.

மேற்கண்ட தகவலை மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com