

சென்னை,
2019-ம் ஆண்டு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளான மதுரை மாவட்டம், மணிநகரம் பகுதியைச் சேர்ந்த பூரண சுந்தரி மற்றும் சென்னை மாவட்டத்தை சேர்ந்த பாலநாகேந்திரன் ஆகிய இருவரும் இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வென்று சாதனை புரிந்துள்ளார்கள் என்பதை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.
இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவரும் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் கடமைகளை உணர்ந்து, அர்ப்பணிப்பு உணர்வுடன், அரசு நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, மக்கள் நலம் மேம்படும் வகையில் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று அன்புடன் இத்தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
எண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல என்பதற்கு சான்றாக திகழும் பூரண சுந்தரி மற்றும் பாலநாகேந்திரன் ஆகியோரது வெற்றி, சாதனை படைக்க விரும்பும் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.