

கள்ளக்குறிச்சி,
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி கிராமச்சாவடி தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). மாற்றுத்திறனாளி. இவருக்கும், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கனகா (27) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு கார்த்திகா (4) என்ற மகளும், சிவச்சந்திரன் என்ற 10 மாத ஆண் குழந்தையும் இருந்தனர். சரவணன், அதே பகுதியில் உள்ள ஒரு ஆடிட்டரிடம் கணக்கு எழுதும் வேலை பார்த்து வருகிறார். அருகில் உள்ள வீட்டில் இவரது அண்ணன் ரவி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு கனகாவும், குழந்தை சிவச்சந்திரனும் வீட்டில் உள்ள ஒரு அறையிலும், சரவணன், கார்த்திகா மற்றொரு அறையிலும் படுத்து தூங்கினர். நேற்று அதிகாலை கனகா படுத்திருந்த அறையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அலறித்துடித்த அவரது சத்தம் கேட்டு பக்கத்தில் இருந்த சரவணனின் அண்ணன் ரவி, அண்ணி புனிதா மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.
அப்போது சரவணன் லேசான தீக்காயத்துடன், அலறியபடி கதவை திறந்து கொண்டு வந்தார். அப்போது வீடு முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது கனகாவும், குழந்தை சிவச்சந்திரனும் உடல் கருகிய நிலையில் கிடந்தனர்.
இதைத்தொடர்ந்து படுகாயமடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை சிவச்சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் கனகாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே கனகா உயிரிழந்தார். தீக்காயமடைந்த சரவணனுக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கனகா படுத்திருந்த அறையில் தீப்பற்றியதால் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்துள்ளது.
மேலும் ஜன்னல், சுவர் முழுவதும் கரும்புகை படிந்திருப்பதால், யாரேனும் மர்மநபர்கள், பெட்ரோல் ஊற்றி அவர்களை தீ வைத்து எரித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.