400 கார்களையும் ஏற்றி செல்லும் வசதியுடன்: சென்னையில் இருந்து கடலூர், புதுச்சேரிக்கு பயணிகள் படகு சேவை

சென்னை துறைமுகத்தில் இருந்து கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு விரைவில் பயணிகள் படகு சேவை தொடங்க இருக்கிறது. 400 கார்களையும் ஏற்றி செல்லும் வசதியும் உள்ளது என்று துறைமுக அதிகாரிகள் கூறினர்.
400 கார்களையும் ஏற்றி செல்லும் வசதியுடன்: சென்னையில் இருந்து கடலூர், புதுச்சேரிக்கு பயணிகள் படகு சேவை
Published on

சென்னை,

சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும். வாகன விபத்துகளால் ஏற்படும் உயிர் பலியாவதையும் தடுக்க வேண்டும். அத்துடன் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையில் உள்ள கார்பன் மோனாக்சைட் என்ற நச்சுப்பொருள் காற்றில் கலப்பதால் காற்று மாசுப்படுவதுடன், சுற்றுப்புறசூழலும் மாசு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க ஒரு துறைமுகத்தில் இருந்து மற்றொரு துறைமுகத்திற்கு நீர்வழி போக்குவரத்தை அதிகரிக்க மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் அனைத்து துறைமுகங்களுக்கும் உத்தரவிட்டு உள்ளது.

அதனடிப்படையில் மும்பை, கோவா, கொச்சின், குஜராத் ஆகிய துறைமுகங்களில் இருந்து பயணிகள் படகு போக்குவரத்து சிறப்பாக நடந்து வருகிறது. சென்னை துறைமுகத்தில் இருந்து வாரம் தோறும் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேருக்கு பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. அத்துடன் வெளிநாடுகளில் இருந்து ஆண்டுக்கு 10 சொகுசு கப்பல்களும் வந்து செல்கின்றன. தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாட்டு கப்பல்கள் வருகை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

பயணிகள் படகு போக்குவரத்து

இந்தநிலையில் துறைமுகங்கள் மேம்பாட்டுக்கான சாகர்மாலா திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் சென்னை துறைமுகத்தில் இருந்து கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு விரைவில் பயணிகள் படகு போக்குவரத்து தொடங்க இருக்கிறது. இதுதொடர்பாக சென்னை துறைமுகம் தலைவர் பி.ரவீந்திரன் தலைமையில் படகு போக்குவரத்தில் ஈடுபட ஆர்வம் உள்ளவர்களிடம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் சென்னை துறைமுகத்தில் நேற்று நடந்தது. இதில் படகு போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள 5 நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துகளை தெரிவித்து உள்ளனர்.

குறிப்பாக சென்னை-காரைக்கால்-கொழும்பு மார்க்கத்திலும், சென்னை-கடலூர்-புதுச்சேரி-காரைக்கால் மார்க்கம், புதுச்சேரி-காரைக்கால் இடையேயும் பயணிகள் படகு போக்குவரத்தை தொடங்க தனித்தனியாக விருப்பம் தெரிவித்து உள்ளனர். குறிப்பாக சென்னை துறைமுகத்திற்கு கார்களில் வரும் பயணிகள் அவர்களுடைய காரையும் கடலூர், புதுச்சேரி, காரைக்கால் கொண்டு செல்லும் வசதி கொண்ட படகு இயக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் 400 கார்கள் வீதம் கொண்டு செல்லும் படகுகள் இயக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. படகு இயக்குபவர்கள் முறையாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்கள்.

புதிய முனையம்

கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகங்கள் பயணிகள் படகை நிறுத்துவதற்கு வசதியாக படகு நிறுத்தும் பகுதி ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது. வருகிற ஆகஸ்டு மற்றும் செப்டம்பரில் இந்த பணி நிறைவடைய உள்ளது. காரைக்கால் துறைமுகம் ஏற்கனவே ஆழப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை துறைமுகத்திலும் புதிதாக கட்டப்பட்ட முனைய கட்டிடமும் திறக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

ஓரிரு மாதங்களில் பயணிகள் படகு போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

மேற்கண்ட தகவல்களை சென்னை துறைமுக அதிகாரிகள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com