

சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு, முதல் நிகழ்ச்சியாக சென்னையை அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் கடந்த 5-ந்தேதி எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது என்றும், எம்.ஜி.ஆர். தந்த ஆட்சியை நான் தருவேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பாக பேசப்பட்டது.
இந்தநிலையில் ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி வேந்தரும், புதிய நீதிக்கட்சி தலைவருமான ஏ.சி.சண்முகம், சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்துக்கு நேற்று திடீரென்று வந்தார். ரஜினிகாந்தை சந்தித்த அவர், சுமார் 40 நிமிடம் பேசினார். இந்த சந்திப்பின் போது அரசியல் தொடர்பான தகவல்கள் உள்பட பல்வேறு சம்பவங்கள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இதுதொடர்பாக ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது, எங்கள் கல்லூரியில் நடந்த எம்.ஜி.ஆர். சிலை திறப்பு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்து நீண்ட உரையாற்றினார். இது எங்களுடைய நிர்வாகத்துக்கும், மாணவர்களுக்கும் பெரு மகிழ்ச்சியை கொடுத்தது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக எங்கள் வேந்தர், ரஜினிகாந்தை சந்தித்தார். மற்றபடி அரசியல் தொடர்பான பேச்சு இருந்ததா? என்று தெரியவில்லை என்றனர்.
அதனைத்தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், செயலாளர் கதிரேசன், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் நேற்று மாலை சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்கள். டிஜிட்டல் சேவை கட்டணத்தை எதிர்த்தும், டிக்கெட் விற்பனையை கணினிமயமாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1-ந்தேதி முதல் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.
இந்த வேலைநிறுத்தம் தொடர்பாக ஏற்கனவே நடிகர் கமல்ஹாசனை சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகர் விஷால் சந்தித்து பேசினார். அதன் தொடர்ச்சியாக நேற்று நடிகர் ரஜினிகாந்தை, விஷால் சந்தித்து பேசி இருக்கிறார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்ததாக தெரிகிறது.
சந்திப்பின்போது, நடிகர் விஷால், வேலைநிறுத்தத்தின் முக்கியத்துவம் குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் விளக்கமாக எடுத்து கூறியதாகவும், அதற்கு நடிகர் ரஜினிகாந்த், நல்ல நோக்கத்துக்காக தான் வேலைநிறுத்தம் செய்கிறீர்கள் என்றும், ஆனாலும் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாதபடி பார்த்து கொள்ளுங்கள் என்றும் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.
தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடர்ந்து, சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டு இருப்பதால் திரையுலகமே ஸ்தம்பித்து போய் இருக்கிறது.