கவர்னருடன், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் திடீர் சந்திப்பு

கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் திடீரென்று சந்தித்து பேசினார்.
கவர்னருடன், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் திடீர் சந்திப்பு
Published on

சென்னை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த போராட்டங்கள் தொடர்பாக எழுந்துள்ள சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து மத்திய அரசுக்கு, கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிக்கை அனுப்பியுள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கவர்னரை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள், தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்தும், சட்டம்-ஒழுங்கு நடவடிக்கை குறித்தும் விளக்கம் அளித்தனர்.

இந்தநிலையில் தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை நேற்று காலையில் திடீரென்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடந்தது. இந்த சந்திப்பு குறித்து டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது.

நான் தமிழகம் முழுவதும் 30 வருவாய் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரடியாக சந்தித்து பல்வேறு பிரச்சினைகள் குறித்து அறிந்தேன். எனக்கு கிடைத்த அனுபவங்களை கவர்னரிடம் பகிர்ந்து கொண்டேன்.

சில விஷயங்கள் பற்றி அவரும் கேட்டறிந்தார். காவிரி போராட்டத்தால் தமிழகம் போராட்ட களமாக மாற்றப்படுகிறது. இதுபற்றி மக்கள் மனநிலை பற்றிய கருத்துகளையும் தெரிவித்தேன். கவர்னருடனான சந்திப்பு நல்ல தகவல்களை பகிர்ந்து கொண்ட கருத்து பரிமாற்றமாக அமைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com