குருபூஜை விழா நிறைவு பெற்றுள்ள நிலையில் முத்துராமலிங்கத் தேவர் தங்கக் கவசம் அகற்றம்

கடந்த 2014-ம் ஆண்டு அ.தி.மு.க சார்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் இந்த தங்கக் கவசம் வழங்கப்பட்டது.
குருபூஜை விழா நிறைவு பெற்றுள்ள நிலையில் முத்துராமலிங்கத் தேவர் தங்கக் கவசம் அகற்றம்.
முத்துராமலிங்கத் தேவர் தங்கக் கவசம்
Published on: 

ராமநாதபுரம்,

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலையிலிருந்து இன்று தங்கக் கவசம் அகற்றப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மதுரை வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.

தேவர் குருபூஜை

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில், சுதந்திரப் போராட்ட வீரரும் ஆன்மீகச் செம்மலுமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை விழா கடந்த மாதம் 30-ம் தேதி அன்று மிகச் சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்தது. இதில் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். விழாவையொட்டி தேவர் சிலைக்கு 13.5 கிலோ எடையுள்ள தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது.

சிலையிலிருந்து தங்கக் கவசம் அகற்றம்

கடந்த 2014-ம் ஆண்டு அ.தி.மு.க சார்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் இந்த தங்கக் கவசம் வழங்கப்பட்டது. இதன் மதிப்பு பல கோடிகளைத் தாண்டுவதாலும், பாதுகாப்புக் காரணங்களினாலும் ஆண்டுதோறும் விழா முடிந்தவுடன் இது மீண்டும் மதுரை வங்கி லாக்கருக்குக் கொண்டு செல்லப்படுவது வழக்கமாகும். அதன்படி, இன்று (திங்கட்கிழமை) காலை ராமநாதபுரம் மாவட்ட அதிகாரிகள் மற்றும் தேவர் நினைவிடப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் தங்கக் கவசம் சிலையிலிருந்து கழற்றப்பட்டது.

போலீஸ் பாதுகாப்பு- மதுரை வங்கிக்கு மாற்றம்

இதனைத் தொடர்ந்து, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பலத்த பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றப்பட்டு, மதுரை அண்ணா நகரிலுள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளையின் பாதுகாப்புப் பெட்டகத்தில் மீண்டும் ஒப்படைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டது. கவசம் கொண்டு செல்லப்படும் வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

X