பினராயி விஜயன்-எடப்பாடி பழனிசாமி சந்திப்பை மு.க.ஸ்டாலின் திறந்த மனதோடு வரவேற்று இருக்க வேண்டும் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியதை மு.க.ஸ்டாலின் திறந்த மனதோடு வரவேற்று இருக்க வேண்டும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.
பினராயி விஜயன்-எடப்பாடி பழனிசாமி சந்திப்பை மு.க.ஸ்டாலின் திறந்த மனதோடு வரவேற்று இருக்க வேண்டும் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி
Published on

சென்னை,

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 115-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த ஆண்டு வரை அ.தி.மு.க. சார்பில் சி.பா.ஆதித்தனாருக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டு வந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் அடிப்படையில் இந்த ஆண்டு முதல் அரசு விழாவாக சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டில் யாரும் குறை சொல்ல முடியாத அளவுக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் எண்ணங்கள், கனவுகளை நிறைவேற்றுகின்ற அரசாக இன்றைக்கு அ.தி.மு.க. ஆட்சி நடக்கிறது. இதை எப்படியாவது குறை சொல்ல வேண்டும் என்கிற பணியில் தொல்.திருமாவளவன் ஈடுபட்டு இருக்கிறார். இந்த கோயபல்ஸ் பிரசாரத்தை செய்து எதிர்க்கட்சிகள் எல்லாம் ஓய்ந்துவிட்ட நிலையில், தொல்.திருமாவளவன் இதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டாம்.

தி.மு.க. ஆட்சியில் இருந்த காலக்கட்டத்தில் நதிநீர் பிரச்சினையில் தமிழகத்துக்கு துரோகம் இழைத்தது. எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது, காவிரி நடுவர் மன்றம் வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதனடிப்படையில் தான் இன்றைக்கு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இதற்கு விதை போட்டது அ.தி.மு.க. ஆட்சி.

ஆழியாறு, பரம்பிக்குளம், முல்லை பெரியாறு போன்ற காலத்தால் தீர்க்கப்படாத நதிநீர் பிரச்சினைகளுக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதல்-மந்திரியை சந்தித்து பேசியிருப்பதை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்த மனதோடு வரவேற்று இருக்க வேண்டும். ஆனால் பொறாமை மனம் கொண்டவர்கள் எங்கும் குற்றம், எதிலும் குற்றம் காண்கிறார்கள்.

ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அரசியல் வேண்டாம் என்று தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி யதார்த்தமான கருத்தை தான் சொல்லி இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com